சென்னை:
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, மார்ச் 31 ந்தேதியுடன் முடிவடைகிறது.

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதியே கடைசி நாள் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா, லாக்டவுன் எனப் பல பிரச்னைகளால், அதனை இணைப்பதற்கான கெடுவை பல முறை தள்ளி வைத்தது. இந்த நிலையில்தான் வரும் மார்ச் 31 பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

31-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் உங்களுடைய பான் கார்டு பயன்பாட்டில் இல்லை, அதாவது ‘Inoperative’ என வகைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான பான் கார்டு இல்லாமல் இருப்பது 10,000 ரூபாய்வரை அபராதத்திற்கு வழிவகுக்கும், எனவே, விரைவில் பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான்–ஆதார் இணைப்பு முறை

பான் எண்ணை ஆதாருடன் இணையதளத்தின் மூலமாகவே இணைக்கலாம். ஆன்லைனில் இதற்கான வேலையைத் தொடங்குமுன் உங்களுடைய ஆதார் கார்டையும், பான் கார்டையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ஆன்லைனில் www.incometaxindiaefiling.gov.in என்ற வருமான வரித்துறை இணையதளத்தைத் திறக்கவும். அதன் முகப்புப்பக்கத்தில் இடது ஓரத்தில் உள்ள `Link Aadhaar’ என்ற மெனுவைக் கிளிக் செய்யவும்.

அதில் பான் கார்டு எண் கேட்கப்பட்டிருக்கும். உங்கள் பான் கார்டு எண்ணைப் பதியவும். அடுத்து ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும். அதையும் பதியவும். அடுத்து, ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் உங்கள் பெயரைப் பதியவும். அடுத்து ஒரு கிளிக் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய ஆதார் கார்டில் மட்டுமே பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த பட்டனைக் கிளிக் செய்யவும்.

அடுத்ததாக, வழக்கம்போல் `கேப்சா கோட்’ செக்கிங் வைத்திருப்பார்கள். அதைச் சரியாகக் கொடுத்ததும் `Link Aadhaar’ பட்டனைக் கிளிக் செய்யவும். கொடுத்துள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், வெற்றிகரமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாகச் செய்தி வரும்.

உங்களுடைய ஆதார் எண்ணுடன் பான் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் இருந்தால் அதை உறுதிசெய்துகொள்ள ‘Click here to view the status if you have already submitted link Aadhaar request.’ என்று கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில், ‘Click here’ பட்டனைக் கிளிக் செய்யவும். அடுத்து திறக்கும் பக்கத்தில், பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவுசெய்து `View link Aadhaar Status’ பட்டனைக் கிளிக் செய்யவும். உங்களுடைய பான் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டு இருந்தால், அதற்கான செய்தி கிடைக்கும்.