இட ஒதுக்கீடு உச்சவரம்பு மாறினாலும் சாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியம் : லாலு  பிரசாத் கருத்து

Must read

பாட்னா

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இட ஒதுக்கீடு உச்சவரம்பு மாறினாலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவர் இந்த வருடம் விடுதலை பெற்றுள்ளார்.  அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்து வருகிறார்.

சமீபத்தில் பாட்னா நகரில் ரா ஜ த தொண்டர்களுக்கு ஒரு பயிற்சி முகாம் நடந்தது.  அதில் லாலு கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “நான் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராகவும் ரயில்வே அமைச்சராகவும் பணி புரிந்துள்ளேன்.  நாடாளுமன்றத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என முதலில் நான் தான் குரல் கொடுத்தேன்.

தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறை பல வருடங்களுக்கு முன்பு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.  இது தற்போது போதுமானதாக இல்லை. சுதந்திரத்துக்கு முன்பு இருந்த மக்கள் தொகையில் தற்போது அதிக மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.  எனவே தற்போது சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகும்.

இதனால் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு உச்சவரம்பான 50% மாறி மேலும் உயர வாய்ப்புள்ளது.  நான் எப்போதும் தலித் மற்றும் பழங்குடியினர் நலத்தைக் கோரி வருகிறேன்.  எனவே இட ஒதுக்கீடு உச்சவரம்பு மாறினாலும் அவசியம் சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article