குற்றம் கடிதல்: 11
6
மிழ் திரைப்படத் தொழிலின் மைய நீரோட்டம் கதாநாயக பிம்பம் சார்ந்தது. அதன் தலைமை 35 ஆண்டுகளாக ரஜினி, கமல் என்ற இரு தெய்வீக பிம்பங்களிடம் உள்ளது. அவ்வப்போது இந்த மைய நீரோட்டத்திலிருந்து வடிவம், கதைக்களம் இரண்டிலும் சோதனை முயற்சிகள் நடைபெறுவதுண்டு. அவை அபூர்வமாக வெற்றி பெறுவதும் உண்டு. அப்படி வெற்றி பெற்ற படத்தின் நாயகர்களும் இயக்குநர்களும் மெல்ல மெல்ல மைய நீரோட்டத்தை நோக்கி நகர்ந்து கரைந்து போனதுதான் இதுவரை தமிழ் சினிமாவின் வரலாறாக இருந்திருக்கிறது; இருக்கிறது.
’அட்டக்கத்தி’, ’மெட்ராஸ்’ படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித், ரஜினியை வைத்துப் படம் இயக்குகிறார் என்ற செய்தி வந்தபோதும் அந்த அறிவிப்பு அப்படித்தான் பார்க்கப்பட்டது. ஆனால் தனது முந்தைய இரு படங்கள் மூலம் பா.ரஞ்சித் காட்டியிருந்த வண்ணம் புதிய போக்கிற்குக் கட்டியம் கூறியது. ஆதிக்க சாதித் திமிரே தமிழ்ப் பண்பாடு என விதந்தோதப்பட்டு வந்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பு நிலையை வெளிப்படையாகப் பேசி வெற்றி பெற்ற படங்களின் இயக்குநர் என்ற அளவில் எதிர்பார்ப்பு வெகுவாக உருவாகியிருந்தது.

ரஞ்சித்
ரஞ்சித்

அண்மைக் காலத்தில் ரஜினியின் ரசனையில் திடீரென ஒரு மாற்றம் காணப்பட்டது. அதன் உச்சமாக ”ஜிகர்தண்டா’ படத்தின் ’அசால்ட் சேது’ பாத்திரத்தில் நடிக்க என்னைக் கேட்டிருந்தால் நடித்துக் கொடுத்திருப்பேன்” என்று கூறினார். இதன் மூலம் ’முள்ளும் மலரும்’, ’ஜானி’ படங்களின் ரஜினியைக் காணும் ஏக்கத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் ஆவல் அதில் தெரிந்தது.
இதனால் ரஞ்சித் – ரஜினி கூட்டணி ஒரு எதிர்பார்ப்பை அனைத்துத் தரப்பிலும் கூட்டியது. தொடர்ந்து ’கபாலி’ படம் குறித்து வெளியான தகவல்கள் வழக்கத்துக்கு மாறாக, அது இயக்குநர் படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுத்தன. அதன் டீஸர் வெளியானதைத் தொடர்ந்து ‘கபாலி’ ஒரு தலித் படம் என்ற பேச்சு பரவியது. அதற்கேற்ப ’நெருப்பு..டா’ பாடலும், கபாலி போன்ற பெயர் குறித்து பொதுப்புத்தியில் உறைந்துள்ள கருத்தை அடித்து நொறுக்கும் வகையில் இடம்பெற்ற டீஸர் வசனமும் வைரல் ஆகியது.
பல தலித் அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் ஆரவாரம் செய்தன. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, தலித் விடுதலைப் போராட்டங்கள் பெருகி வரும் ஒரு காலகட்டத்தை இது உணர்த்துகிறது. இரண்டாவது உச்சபட்ச நாயகனின் படம் தலித் வாழ்க்கையைப் பேசப் போகிறது என்பது தமிழ் சினிமா வரலாற்றில் இது முதல் முறை. இது ரஜினி தவிர வேறு நாயக பிம்பங்களால் சாத்தியமில்லை என்பதால் இதன் மீதான நம்பகத்தன்மை ரசிகர்களிடம் அதிகரித்தது.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட மக்களின் தளபதியாக ரஜினியைக் காண ஒட்டுமொத்தத் தமிழகமே காத்திருந்த நிலையில் ’இது ரஜினியை வெறும் வணிக முத்திரையாகப் பயன்படுத்தும் சந்தைப்படுத்தும் முயற்சிதான்’ என்பதைக் கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
உண்மையிலேயே ’கபாலி’ ஒடுக்கப்பட்ட மக்கள் படமாக இருக்குமானால் அதை அந்த மக்கள் கண்டு ரசிக்கவைப்பதில்தான் இருக்கிறது. ஆனால், அந்த மக்களின் பெரும் பகுதியினர் ’கபாலி’யைத் திரையரங்கிலும் தரிசிக்க வக்கு இல்லாமல் திருட்டு டிவிடியும் கிடைக்காமல் ‘நெருப்புடா, நெருங்குடா, துட்டுடா’ என நவீன நந்தன்களாக வெளியில் நிறுத்தப்படும் நிலைதான் உருவாகி வருகிறது. ஆமாம், ஒரு சாதாரண கூலித் தொழிலாளியால் கொடுக்க முடியாத அளவுக்கு டிக்கெட் விலை வைக்கிறார்கள்.
2
அதுமட்டுமல்லாமல் விளம்பரம், ஸ்பான்சர், மெர்சண்டைஸ் என ’கபாலி’ பட வியாபாரம் எகிரிக்கொண்டே போகிறது. இதைக் கண்டு ஒட்டுமொத்தப் பொருளாதார ஆய்வுலகமும் ஸ்தபித்துப் போயிருக்கிறது. சந்தைப் பொருளாதார வல்லுநர்களே வாய் பிளந்து அதிசயித்தும் அதிர்ச்சியிலும் பார்க்கிறார்கள்.
ஏன்?
இதற்கு முன் வந்த ரஜினியின் ’லிங்கா’ ஒரு மெகா தோல்வி. அதற்கு முன் வந்த ’கோச்சடையான்’ பொம்மைப் படமும் மெகா மெகா தோல்வி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ரஜினி என்ற ஒற்றை பிம்பம் ஒரு சக்தி வாய்ந்த வணிக முத்திரையாக இருப்பதுதான்.
’கபாலி’ பட விற்பனை அறிவிப்பு வந்த அன்றே பட வியாபாரம் முழுமையாக முடிந்திருக்கும் என்கிறார்கள் தமிழ்த்திரை உலகினர். அந்த வியாபாரத்தில் ரஜினியின் சம்பளம் மற்ற கலைஞர்களின் ஊதியம் உள்ளிட்ட படப்பிடிப்புக்கான மொத்தச் செலவையும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே தயாரிப்பாளர்கள் எடுத்திருப்பார்கள். அடுத்து தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியிட்டதும், ஊடகங்களே ராஜ விசுவாசத்தில் வெளியிட்ட செய்திகளாலும் ’கபாலி’ படத்தின் மொழி மாற்ற உரிமைகள், பாடல் உரிமை, வெளி நாடுகள் உரிமை மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமை என ’கபாலி’ பட வியாபாரம் மொத்தத்தில் ரூ.200 கோடியைத் தொட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதையெல்லாம் விட கபாலியை மொய்க்கும் விளம்பரதாரர்கள்தான் பொருளாதார ஆய்வாளர்களையும் சந்தை வல்லுநர்களையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறார்கள். விளம்பரதாரர்களைப் பாருங்கள்:

  • ஏர் ஏசியா விமான நிறுவனம்
  • ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனத்தின் புதிய படமான ஐஸ் ஏஜ் – 5 க்கான விளம்பரம்
  • ஏர் டெல்
  • முத்தூட் பைனான்ஸ்
  • மல்டிபிளக்ஸ் ஸ்பான்ஸராக பி.வி.ஆர் சினிமாஸ்
  • கபாலி’ டி- ஷர்ட் விற்கும் சென்னை காகா (CAGA) ஸ்டோர்ஸ்

மட்டுமல்லாமல் கழிவறை இல்லா வீடுகளில் கழிவறை கட்டுபவர்களுக்கு ’கபாலி’ டிக்கெட் இலவசம் என்றும் ரஜினியின் நல்லெண்ணத்துக்காகப் புதுவை அரசு ஊழியர்களுக்கு அரசே டிக்கட் வாங்கித் தரும் என்றும் புதுவை யூனியன் பிரதேச நிர்வாகம் அறிவித்தது.
4
ஹாலிவுட்டின் பிரபல சினிமா நிறுவனம் பாக்ஸ் ஆபீஸ். இது அண்மையில் தயாரித்துள்ள படம், ஐஸ் ஏஜ் 5. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த கபாலியின் நெருப்புடா பாடலை வாய்ஸ் மிக்ஸ் செய்து வெளியிட்டிருக்கிறது.
இன்னும் ஏராளமான நுகர்பொருள் நிறுவனங்கள் ‘கபாலி’யுடன் இணைந்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள்.
இன்னமும் ‘கபாலி’ டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரியவில்லை. குறைந்தபட்ச விலை ரூ.500 என்கிறார்கள். சிறிய நகரங்களில் ரூ.200 இருக்கலாம். ஆனால் ‘எந்திரன்’ டிக்கெட்டை ரூ.3,000/-க்கு வாங்கியதாக ஒரு ரசிகர் கூறுகிறார். காரணம் டிக்கெட்டுகள் ஒட்டுமொத்தமாக பிளாக் செய்யப்படுகின்றன. ஐ.டி நிறுவனங்கள் போன்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு மொத்தமாக விற்கப்படுகின்றன. முதல் நாள், முதல் காட்சி மோகத்தில் டிக்கெட் பிரிமியம் விலை எகிறுகிறது. நீங்கள் ரூ.3000 கொடுத்து வாங்கினால் உங்களிடம் ரூ. 5,000 கொடுத்து அதை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பார்களாம்.
தவிர, தமிழக எம்.எல்.ஏ.க்களும் ’கபாலி’ காட்சிகளை ஒட்டுமொத்தமாக புக் செய்கிறார்களாம். ’கபாலி’ விளம்பரத்தைப் பயன்படுத்தி தங்கள் தளங்களை விரிவுபடுத்திக் கொள்ள தங்கள் தொகுதி வாக்காளர்களுக்கு சொந்த செலவில் திரையரங்குகளை புக் செய்கிறார்கள், ’கபாலி’ வினியோக உரிமையை ஆளும் கட்சிக்குச் சொந்தமான ஜாஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால், ஒருவேளை அதற்கு லாபம் ஈட்டித் தரும் கடமையாகவும் இருக்கலாம்.
உண்மையைச் சொல்லப் போனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நெருக்கடியில் இருக்கிறார்கள். காரணம் இதுவரை இல்லாத அளவில் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள். இந்தப் பணத்தை எவ்வளவு சீக்கிரம் எடுக்கிறார்களோ அவ்வளவுக்கு நட்டம் குறையும் என்பதே நிலை. என்னதான் இணையத்தில் பதிவிறக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் வேறு மார்க்கங்களைக் கண்டுபிடித்து விடுவார்களாம்.

ஐஸ் ஏஜ் 5 - கபாலி
ஐஸ் ஏஜ் 5 – கபாலி

ஆனால் இதற்கும், விளம்பரதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அது தயாரிப்பாளர் தரப்புக்கானது, அல்லது சந்தைப்படுத்தும் நிறுவனத்துக்கானது. படம் குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்து மக்களை தியேட்டரை நோக்கி உந்தித் தள்ளுவதற்கு இது உதவலாம்.
அந்த வரிசையின் கடைசியில் நிற்கப் போவதென்னவோ உண்மையான ’ரஜினி ரசிகன்’ என்பதுதான் சோகம்.
கபாலி… டா, நெருப்பு .. டா, துட்டு … டா!