குற்றம்கடிதல்: 18
1940களின் இறுதியில் அப்போதைய புதுக்கோட்டை மன்னர் ஒரு உத்தரவு போட்டார். அது, பி.யு.சின்னப்பாவுக்கு இனிமேல் யாரும் சொத்துகளை விற்கக் கூடாது என்பது ஆகும். ஏனென்றால் அந்த அளவுக்கு புதுக்கோட்டை முழுவதும் சொத்துகளாக வங்கிக் குவித்தாராம் பி. யு. சின்னப்பா. தம்மைவிட அதிகச் சொத்துகளை வாங்கிவிடுவார் என்ற அச்சத்தால் மன்னர் இவ்வாறு உத்தரவிட்டதாக அந்தக்காலத்தில் கூறப்பட்டது. 1951ல் பி.யு.சின்னப்பா இறக்கும்போது அவரது சொத்து மதிப்பு ரூ 200 கோடி.

 பி.யூ. சின்னப்பா
பி.யூ. சின்னப்பா

இன்று அதன் மதிப்பு எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். (அவரது ஒரேமகன் இறந்துவிட்டார். மருமகள் சத்துணவு ஆயாவாக இருக்கிறார்.) அவ்வளவும் திரைப்படங்களில் நடித்து சம்பாதித்தது. அவரது உழைப்பு கடுமையானது. வாழ்க்கையில் கடுமையான எதிர்நீச்சல் போட்டுத்தான் இந்த முன்னேற்றத்தைக் கண்டார். பணத்தை விடுங்கள். அவர் அடைந்த புகழைக்கூட அவரால் வாழ்ந்து அனுபவிக்க முடியவில்லை. 35 வயதில் அகால மரணம். காரணம் குடிதான்!
டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரத்துக்கு மட்டும் சக்கரவர்த்தியில்லை; சுயமரியாதைக்கும் சக்கரவர்த்தி. இசைக் கலைஞர்களை இழிவாக நடத்திய அந்தக் காலத்தில் சனாதனவாதிகளுக்குப் பயப்படாமல் தலை நிமிர்ந்து நின்று தனது சுயமரியாதையை காப்பாற்றியவர், மட்டுமல்ல, அவ்வாறு சுயமரியாதை இல்லாத கலைஞர்களுக்கும் சொரனை வரும்படி செய்தவர். மற்ற கலைஞர்கள் இடுப்பு வேட்டியும் வெற்று மார்புமாக, கூப்பிய கையுமாக நின்றபோது பட்டுவேட்டி, பட்டுஜிப்பா, வைர மோதிரங்கள், கழுத்து நிறைய தங்க நகைகள், நாதஸ்வரத்தில் தங்கப்பூண் என்று அமர்க்களமாகக் களம் இறங்கியவர். அப்போதெல்லாம் அவரது ஊரில் ரயில் நிற்காது என்பதால் ஒவ்வொரு முறையும் தனது வீட்டுப்பக்கமாக ரயில் நெருங்கும்போது, அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திவிட்டு, அபாயக் கட்டணத்தை வீசிவிட்டு கம்பீரமாக இறங்கி நடப்பார்.
டி.என். ராஜரத்தினம்
டி.என். ராஜரத்தினம்

ஒரு முறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை கலந்துகொண்ட நிகழ்வுக்கு பெரிய அதிகாரி (வெள்ளையர்) வந்துள்ளார். விழாக்குழுவினர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை காதில் கிசுகிசுத்து மரியாதை செய்யும்படி கேட்டுக்கொண்டபோது ’அவன் உங்களுக்கெல்லாம் அதிகாரின்னா, நான் கலைக்கே சக்கரவர்த்தி; யார் யாருக்கு மரியாதை செய்வது?’ என்று சத்தமாகவே கேட்டவர். இதேபோல மைசூர் அரண்மனையில் தமக்கு முதல் மரியாதை கிடைக்காததால் வெகுண்டவர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் அன்புக்குப் பாத்திரமானார்.
அவரோ குடிக்கு அடிமையானார். ஒரே நாளில் 12 கேஸ் பாட்டில்களைக் காலி செய்தவர் என்ற “பெருமை” பெற்றார். சுயமரியாதை இழந்தார். வறுமையில் வாடினார். 57 வயதில் குடிநோயால் இறந்தார்.
என். எஸ். கிருஷ்ணன்
என். எஸ். கிருஷ்ணன்

ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆறுதலுக்காக கலைவாணர் தம்பதியைக் காணச் சென்றாராம். ஆனால், அங்கு கலைவாணரே கிளாசில் மதுவை ஊற்றி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். நமக்கு ஏதாவது புத்திசொல்வார் என நினைத்தால் இப்படி இருக்கிறதே என்று ஜெ.கே எண்ணினாராம்.
இதுபோல பல துறைகளில் முன்னேறிவரும் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் விஷமாக குடி இருக்கிறது. கண்ணதாசன் 53 வயதில் மறைந்தார். கம்பதாசன் என்ற கவிஞனை சமூகம் அடையாளம் காணும் முன்பே மது அழைத்துக்கொண்டது.
குடியால் அன்றாடம் நுற்றுக்கணக்கான மக்கள் அகால மரணமடைந்தாலும் பிரபலங்கள் பாதிக்கப்படும்போதுதான் இப் பிரச்சனை கவனம் பெறுகிறது. அண்மையில் அநியாயமாக அகால மரணமடைந்த ஒரு பிரபலத்தின் மரணம் மீண்டும் இதுகுறித்துச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. உண்மையில் அந்த பிரபலத்தின் மரணத்துக்கு மது தான் காரணமா என்று தெரியாது. ஆனால் சமூக வலைதளங்களில் அப்படித்தான் எழுதுகிறார்கள். ஆனால், அவர்கள் மாய்ந்து, மாய்ந்து எழுதும் இரங்கற்பாக்களில் சுய தம்பட்டம்தான் தெரிகிறது.
போனபிறகு வரிந்துகொண்டு இரங்கற்பா எழுதுவதால் என்ன பலன்? இருக்கும் பொழுது கண்டித்திருந்தால் அதற்கு வெட்கப்பட்டாவது நிறுத்தியிருப்பார். அல்லது குறைத்துகொண்டாவது இருப்பார்.
மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களிடம் இத்தகைய பண்பு இருந்ததாகப் பலரும் கூறியுள்ளனர். அதுவும் நேரடியாகக்கூறாமல் அருகில் இருப்பவர்களுக்குக்கூட கேட்காமல் ‘உடலைக் கவனித்துகொள்ளுங்கள். நமக்கெல்லாம் உடல்தானே முக்கியம். உங்களைப்பற்றிக் கேள்விப்படுகிற தகவல்கள் கஷ்டமாக இருக்கு’ என்பாராம். நடிகர் வி.கே. ராமசாமி ‘எனது கலைப்பயணங்கள்’ என்ற தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் இதனை பூடகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்.

அதுமட்டுமல்லாமல், அரசியல் ரீதியான எதிரி ஆனாலும் அவரது மகன் போதைப் பழக்கத்தால் சீரழிவதைக் கேள்விப்பட்டு, அவரை நேரில் அழைத்து ‘உன் தந்தை எனக்கு அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியில் இருந்தாலும் சமூகத்தில் மதிக்கத்தக்கவர். அவரது பெயரையும் புகழையும் கெடுக்கும் வகையில் இப்படிச் செய்கிறாயே’ என்று கண்டித்து அனுப்பியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதனால், இரங்கற்பா எழுதும் வாய்ப்புக்காகக் காத்திருக்காதீர்கள்; அதைவிட உறவு முறிந்தாலும் பரவாயில்லை என்று இருக்கும்போதே கண்டியுங்கள். இப்போது முல்லா கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒருவன் ஒருநாள் முல்லாவைச் சந்தித்து தனக்கு இருக்கும் கெட்டபழக்கங்களை நிறுத்த ஆலோசனை கூறுங்கள் என்றானாம். அதற்கு, ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றாரம் முல்லா. அந்த நபரும் ஒரு வாரம் கழித்து வந்தார். அப்போது முல்லா பல நல்ல ஆலோசனைகள் கூறியிருக்கிறார். கவனமாகக் கேட்டுக்கொண்ட அந்த நபர் கடைசியில் ‘இதை சென்ற வாரமே கூறியிருக்கலாமே. ஏன் ஒரு வாரத்தை வீணடித்துவிட்டீர்கள்’ என்றாராம். அதற்கு, ‘இல்லை, நீங்கள் சொன்ன கெட்ட பழக்கங்களில் ஒன்று என்னிடமும் இருந்தது. அதை முதலில் என்னால் நிறுத்தமுடிகிறதா என்பதைச் சோதித்துப்பார்த்தேன், இப்போது நிறுத்திவிட்டேன். உங்களிடமும் தைரியமாகக் கூறமுடிந்தது’ என்றாராம் முல்லா.
இது, தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன இன்று ஒரு தகவல்:
நூறு வயது கடந்தும் ஆரோக்கியமாக வாழும் பெரியவரை ஒரு நிருபர் பேட்டிகாணச் சென்றிருக்கிறார். அவரும் உடல், மனதை கட்டுப்பாடாக வைத்திருப்பது எப்படி? போதைப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி என்று ஏராளமான தகவல்கள்கூறி இதன்படி வாழ்ந்தால் நூறு ஆண்டுகளைத் தாண்டியும் வாழலாம் என்றாராம்.
இவ்வாறு அவர் பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போதே  மாடி அறையில் கூப்பாடும், உளறலும் பாட்டில்கள் உருளும் சத்தமும் கேட்டபடி இருந்திருக்கிறது.
இதைக் கவனித்த நிருபர் பேட்டி முடிந்ததும், மாடியில் யாரோ குடிகாரன் இருப்பது போலிருக்கிறதே? யாருக்காவது வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு ‘அந்தக் குடிகாரன் எனது தந்தைதான்’ என்று கூறியிருக்கிறார்.
(கட்டுரையாளர் தொடர்புக்கு jeon08@gmail.com https://www.facebook.com/appsmoo )