ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. “உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே என கோபப்பட்ட லட்சுமி”, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார்? என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது.

லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும், என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி “திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும்” என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், சாரங்கபாணி எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். 108 திருப்பதிகளில் அதிக ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலங்கள் இவையிரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து “கும்பகோணம் சாரங்கபாணி கோவிலே அதிக (ஏழு) ஆழ்வார்களால் மங்களாசாஸனம்” செய்யப்பட்டிருக்கிறது. பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. இதற்கு காரணம் இருக்கிறது. இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தெட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.

சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றை அருள்மிகு சாரங்கபாணி திருக்கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்

தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் சாரங்கபாணி மற்றும் கும்பேசுவரர் கோவிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று “யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும், குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர்” என்பதும் ஐதீகம்.