மாம்பழம் கொடுத்தால் கடன் பிரச்சினை தீரும்; குறைகள் அனைத்தும் தீர்ப்பான் குமரகிரி முருகன்!

குமரகிரி குமரனை மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரம் விருத்தியாகும். திருமணம் முதலான சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். கடன் பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள். கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள் பக்தர்கள்.

குமரகிரி முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலின் ஸ்தல வரலாறு வியக்க வைக்கிறது..

மரமும் நிழலும் பார்த்தால், நடந்து வந்துகொண்டிருக்கும் நாம் கொஞ்சம் இளைப்பாறுவோம்தானே. அப்படி யாத்திரையாக வந்த துறவியும் மலையைப் பார்த்தார். மரங்களைப் பார்த்தார். அடர்ந்து பரந்து விரிந்திருக்கும் நிழலைப் பார்த்தார். ‘அப்பாடா’ என்று மரத்தடியில் அமர்ந்தார். அப்படியே ஜிலுஜிலுவென காற்று தேகத்தில் பட்டதும் தூக்கம் கண்ணை சுழற்றியடித்தது. தூங்கிப் போனார்.

‘அட…நீயும் இங்கே இளைப்பாறுகிறாயா? சாட்ஷாத் முருகப்பெருமானே இங்கு இளைப்பாறியிருக்கிறார்’ என்று அசரீரி கேட்டது. அதிர்ந்து விழித்தார். ‘ஆமாம்…மாம்பழத்துக்காக பிரச்சினை வந்து சண்டையாகிப் போனதே. அப்போது பழநிக்கு கோபித்துக்கொண்டு சென்ற முருகக் கடவுள், இங்கே இதே இடத்தில் இளைப்பாறினார்’ என்று அந்த அசரீரி மீண்டும் கேட்டது.

‘இங்கே குன்றும் இருக்கிறது. குமரனும் வந்து இளைப்பாறியிருக்கிறான். நம்மிடம் பொன்னும் பொருளும் காசும் ஆட்களும் இருந்தால் இந்தக் குன்றில் கோயில் கட்ட லாம்’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டே தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்தார்.

பழநியம்பதிக்குச் சென்றார். முருகப் பெருமானை கண்குளிரத் தரிசித்தார். கண்கள் மூடி முருகப் பெருமானுக்கு எதிரே அமர்ந்துகொண்டார். அப்போது வயது முதிர்ந்த கிழவர் எதிரே நின்றார். அவரைத் தொட்டு உசுப்பினார். துறவியும் கண் திறந்தார். ‘கோயில் கட்ட ஆசைப்படுகிறாயா? காசு இல்லையா? பிச்சையெடு. பிச்சை எடுத்து கோயில் கட்டு’ என்றார். ’இந்தா இதை வைச்சுக்கோ’ என்று திருவோடு கொடுத்தார். நடந்தார். மறைந்தார்.

சிலிர்த்துப் போனார் துறவி. வந்தவர் முதியவர் அல்ல; மனிதரும் அல்லர். முருகக் கடவுளே வந்திருக்கிறான். இது தெய்வ சங்கல்பம்’ என்று நெக்குருகிப் போனார். அங்கே… அந்த மலையில் கோயில் கட்டும் பணியில் இறங்கினார்.

யாசகம் வாங்கிக் கொண்டார். கோயில் கட்டும் பணியைத் தொடர்ந்தார். அழகுற எழுந்து அற்புதமாக அமைந்திருந்தது ஆலயம். குமரன் குடிக்கொண்டிருக்கும் மலை, என்பதால் குமரகிரி என்றே பெயர் அமைந்தது. இன்றைக்கும் குமரகிரி என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ளது குமரகிரி. சிறியதொரு மலையில் அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். சேலம் அம்மாபேட்டை அருகில் சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ளது குமரகிரி.

மாம்பழத்துக்காக தனித்து வந்தவர் இளைப்பாறிய இடம்… தலம் என்பதால், இங்கே உள்ள முருகப்பெருமானுக்கு மாம்பழம் நைவேத்தியம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் மாம்பழம் கொடுத்து பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

இங்கே உள்ள முருகப் பெருமானின் திருநாமம் பாலசுப்ரமண்ய சுவாமி. இங்கே கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறுகிறது. குமரகிரி மலையில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமானை தரிசிக்க படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

குமரகிரி குமரனை மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரம் விருத்தியாகும். திருமணம் முதலான சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். கடன் பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள். கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள் பக்தர்கள்.