சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவாகி வருவதாக எச்சரித்துள்ளது.

நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இது மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த நிலையில், தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (30-11-2023) தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தற்போது,

”இன்னும் 2 நாட்களில் வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடையும். 

இதனாலும் தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் இன்று  முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக் கூடும். 

இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், நாளை (30-11-2023) காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

நாளை மறுதினம் (01-12-2023) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். 

சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.” 

என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.