சென்னை

தமிழக சட்டசபையிடம் எப்போதுமே ஆளுநர் தோற்றுக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவ்த்துள்ளார்.

நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறார். ஒரு ஆளுநர் பிரச்சினைக்குரியவராக மாறி இருப்பது இதுவரை தமிழக வரலாற்றில் இல்லை. உச்சநீதிமன்றமே, “நாங்கள் கேள்வி கேட்ட பிறகு நீங்கள் ஏன் கோப்புகளைத் திருப்பி அனுப்பினீர்கள்” என்று ஒரு கொட்டு கொட்டி இருக்கிறது. ஆளுநர் ஏன் கையெழுத்து இடவில்லை என்பதை விளக்குவதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய உளவுத்துறை அமைச்சகம் மண்டியிட்டுச் சொல்லி இருக்கிறது. 

அப்படி என்றால், கோப்புகளில் ஏன் கையெழுத்து இடவில்லை என்று ஆளுநர் முடிவு செய்யவில்லையா? எந்த முன்யோசனையும் இல்லாமல்தான் கையெழுத்து இடாமல் இருந்தாரா? எனவே, தமிழகச் சட்டமன்றம் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எல்லா விஷயங்களிலும் ஆளுநர் அதனிடம் தோற்றுக் கொண்டிருக்கிறார். எவ்வளவு தோல்வி அடைந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் கிறுக்குத்தனம் செய்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பது குறித்த விஷயத்தில் ஆளுநர் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளார். இதற்காக அவர் வெட்கி தலைகுனிய வேண்டும். அ.தி.மு.க. – பா.ஜனதா பிளவு என்பது கற்பனையானது, பொய்யானது. ஏற்கனவே அவர்கள் முடிவு செய்து நடத்தும் ஒரு நாடகம் அது. அவர்களுக்குள் எந்த அளவிற்குக் கருத்து வேறுபாடு என்பதையாவது அ.தி.மு.க. சொல்ல வேண்டும். 

என்ன காரணத்துக்காகக் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. தெரிவிக்க வேண்டும். இதில் இருந்தே இது ஒரு தவறாகக் கதை வசனம் எழுதப்பட்ட நாடகம் என்பது தெரிகிறது. 

பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், விவசாயிகளின் விரோத போக்கு, அதானி, அம்பானி உள்ளிட்ட சில தொழில் அதிபர்களின் சொத்துக்குவிப்புக்குத் துணை போவது உள்ளிட்டவற்றை ஆதாரத்துடன் பட்டியலிட்டு பா.ஜனதா ஆட்சிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தமிழக காங்கிரஸ் கட்சி டிசம்பர் கடைசி வாரத்தில் சிறு பிரசுரமாக வெளியிட உள்ளோம்.”

என்று தெரிவித்துள்ளார்.