கோயம்புத்தூர்

னமழையால் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது.    இதனால் கடும் வெள்ளம் ஏற்பட்டது.  இந்த வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருவிகள் மூடப்பட்டு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டன.  அவற்றில் கோவை குற்றாலமும் ஒன்றாகும்.

இங்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.  தற்போது மழை முழுவதுமாக குறைந்துள்ளது.   கோவைக் குற்றாலத்துக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளதால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை.  எனவே வரும் 14 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட உள்ளது என மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் அறிவித்துள்ளார்.

அசோக் குமார், “”கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு வருபவர்களை 4 குழுக்களாகத் தினமும் உள்ளே அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 150 பேர், அதேபோல காலை 10.30 மணி முதல் 11 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள்” என அறிவித்துள்ளார்.