கோவை: கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான ஜமீஷா முபின் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்பு உடைய அவரது நண்பர் முகமது இத்ரீஸ் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 12வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 23ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அதாவது காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக காவல்துறையினரால் கூறப்பட்டது. இந்த கார் வெடிப்பு சம்பவம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த ஜமிஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின் வீட்டில் இருந்து சுமார் 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றபட்டன. மேலும் காரில் சிலிண்டர் வெடித்ததில் வெடிகுண்டில் உபயோகப்படுத்தப்படும் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இதனால், இது தற்கொலை தாக்குதல் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட டைரியில், கோவை மாநகரில் 5 இடங்களில் குண்டு வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த பயங்கரவாதி முபினுக்கு உதவியதாகவும், அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுத்தடுத்து பலரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கும் தொடர்பு இருப்பதும், இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு குற்றவாளியுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் கோவை உள்பட பல இடங்களில் குண்டு வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடக என பல இடங்களுக்கும் சென்று தேசியபுலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்துவந்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்தனர். கோவையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மாலையில் அவரை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர்.
விசாரணையில் முகமது இத்ரீஸ் கோவை கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்திய ஜமீஷா முபினின் நெருங்கிய நண்பர் என்பதும், கூட்டு சதியில் இவருக்கும் தொடர்பு இருப்பது, கைதான நபர்களிடமிருந்து கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் ‘சதி’ அம்பலம்!
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் “அரசின் இயலாமையை வெளிப்படுத்துகிறார் செந்தில்பாலாஜி! அண்ணாமலை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்!