வேண்டியதை அளிக்கும் கோதண்டராமர் திருக்கோயில் -வேதா கோபாலன்

Must read

 

நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை

சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே

நம்மில் பலர் தஞ்சாவூரில் பல இடங்களுக்குப் போவோம். நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைக்குக் கிழக்கே நாலு மைல் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போகும் எத்தனை பேர் அதற்கு மிக அருகில் இருக்கும் அற்புதமான ‘அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்கு’ச் சென்றிருக்கிறோம்? தஞ்சை தரணியின்கண் இந்தக் கோயில் ஜம்மென்று உட்கார்ந்திருப்பது ஓர் அழகுதான். கோயிலுக்குள் ஒரு சின்ன ஏக்கம் எழாமல் இல்லை! ஏன் அதிகக்கூட்டம் இல்லை? ஓ! இவர் தன் மகிமையை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளவில்லையோ! அந்தப் பணியை நமக்களித்திருக்கிராரோ!

ஆஹா!  என்ன ஒரு பழமை! என்ன ஒரு ஏகாந்தம்! அங்கேயே குடியிருந்து விட மாட்டோ மா என்னும்படியான ஒரு ரம்யமான சூழல்!

இது தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்தது

நகரத்தின் சந்தடிகளையே பார்த்து வளர்ந்த நமக்குக் கோயிலின் விஸ்தாரம் பிரமிப்பளிக்கிறது. திருமங்கைமன்னன் திருமந்திர உபதேசம் பெற்றுப் பாடி மகிழ்ந்த திருத்தலம் இது என்னும்போது இன்னும் அதிக பிரமிப்பு ஏற்படுகிறது.

இது இன்று நேற்று உருவான கோயில் அல்ல! தஞ்சையை ஆண்ட மன்னன் பிரதாப் சிங் இதைக் கட்டினார் அவர் காலம் கி.இபி. 1739 – 1763 எனில் கோயிலின் பழமையை நீங்களே கணக்கிட்டு வியந்து கொள்ளுங்கள்! மராட்டிய அரசி எழுனாம்பாள் பாஹி சாஹேப் அவர்கள் இந்தத் திருக்கோயில் பூஜைப் பணிக்காக ஒட்டக்குடி, ரிஷியூர், கொட்டையூர், மகிமாலை ஆகிய கிராமங்களில் சுமார் 130 ஏக்கர் நஞ்சை நிலங்களை அர்ப்பணித்துள்ளார். மேலும் பல திருப்பணிகைளைசங செய்ய உள்ளமையால் இளவரசியின் நினைவாக அவருடைய பெயரை முன் வைத்து எ.ஸ்ரீ.கோ என்று வழங்கப்படுகிறது.

கோயிலுக்குள் நுழையும்போதே அந்த ராஜகோபுரத்தின் அமைப்பு ஜம்மென்று நிமிர்ந்து நின்று இடுப்பில் கைவைத்து நம்மை வாவென்று அழைக்கிறது. கிழக்கு நோக்கிய கோபுரம். அடேயப்பா என்ன ஒரு நுணுக்கமான கட்டடக்கலை அமைப்பு!

அடுத்துள்ளது மகாமண்டபம். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம் செப்புத்தகட்டால் போர்த்தப்பட்டு உயர்ந்து நிற்கிறது. இதன் அடிப்பகுதியில் என்னமோ எழுதப்பட்டிருக்கிறதே! நெருங்கிப் போய்ப் பார்த்தால் வியப்பேற்படுகிறது.  கி. பி. 1832- 1855 காலத்தில் வாழ்ந்த மராட்டிய மன்னன் சிவாஜியின் பட்டத்தரசியான காமாட்சியம்பா பாயி சாஹேப்  அவர்கள் 1892 ல் செய்த அற்புதத் திருப்பணி பலவற்றைப்  பற்றிய விவரக்குறிப்புகள் வியக்க வைத்து பிரமிப்பு ஏற்படுத்துகின்றன. இருங்கள்.. இருங்கள். கொடிமரத்தின் சிறப்பை நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை. இது அழகிய வட்டக்கல்லின்மீது அமைந்துள்ளது இதன் அடிப்பகுதியில் கிழக்குப் பக்கம் சீதை, ராமருடனும் லட்சுமணருடனும் காட்சியளிக்க, தெற்குப் பக்கம் சங்கும் மேற்குப்பக்கம் நாமமும், வடக்குப் பக்கம் சக்கரமும் அமைந்துள்ளன. வைத்த கண்களை எடுக்க முடியாது! அவ்வளவு அழகான புடைப்புச் சிற்பங்கள். இம்மண்டபத்தின் உட்புறச் சுவர்களில் ஸ்ரீ கருடாழ்வாரும் ஸ்ரீ  ஆஞ்சநேயரும் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும் அழகிய தஞ்சை ஓவியப்பாணியல் வண்ணமயமாகத் தீட்டப்பட்டுள்ளனர். துவஜஸ்தம்பத்தை ஒட்டியிக்கும் சன்னிதி கருடாழ்வார் சன்னிதி. இந்த கருடனை வேண்டினால் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.

அர்த்தமண்டபம் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களுடன் தண்ணென்று உள்ளது. இருபுறமும் துவாரபாலகர்கள். தென்புறத்தில் விஷ்வக்ஸேனர்.

இப்போது மிகச் சிறப்பு வாய்ந்த இதன் மூலஸ்தானத்துக்கு வருவோம். நம்பினோர் கெடுவதில்லை! அப்படி ஒரு சிறப்பு இந்த மூலவர் ராமருக்கு! ஏன் அப்படி ஒரு சிறப்பு? இந்த ராமர் முழுக்க முழுக்க ‘ஸாளக்கிராமத்தினால் அமைக்கப்பட்டுள்ளது! ஸாளக்கிராமத்தின் சிறப்புத் தெரியுமல்வா! நேபாள மன்னரந தஞ்சை மராட்டிய மன்னருக்கு சீதன அன்பளிப்பாக அளித்தாராம் இந்த ராமரை! நம் வீடுகளில்  திருமணம் முடிந்து சாளக்கிராமம் அளிப்போமல்லவா! இவர்கள் இப்படி மூலவர் திருவுருவங்களான ராமரையும் சீதையையும் அளித்திருக்கிறார்! எல்லா ஆலயங்களிலும் ராமர் லட்சுமணருடன் அனுமனைப் பார்த்திருக்கிறோம். இங்கு சற்றே வித்தியாசமாக சுக்ரீவன் அருள்பாலிக்கிறார்!

உற்வர் அழகு அள்ளுகிறது. ராமர் இளைய பெருமாள் ஜானகி ஆகிய மூவரும் என்ன அழகு! ராமர் சத்தியமாக சிரிக்கிறார்! தியான ஸ்லோகப்படி சிரித்த முகமும்,. கோதண்டத்தின் லாகவமும், அழகிய திருமேனியில் மூன்று வளைவுகளும், கம்பீரத் தோற்றமும் உங்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தும் என்பது உத்தரவாதம். அந்த அழகி ஜானகி சாமுத்ரிகா லட்சணத்துடன் அடக்கமே வடிவாக.. அடடே.. என்ன அழகு! இளையவரின் சேவையும் விசேஷம்.

விமானத்தின் சிறப்பும் சொல்லத்தரமன்று. 96 வகை விமானங்களில் சிறப்பு வாய்ந்ததான செளந்தர்ய விமானம் பெயருக்கேற்றாற்போல்  அப்படி ஒரு அழகு.

திருச்சுற்றில் தசங்கு சக்கரத்துடன் கூடிய தும்பிக்கை ஆழ்வார் சன்னிதியும் அருகில் மகா சுதர்சன மூர்த்தி சன்னிதியும் அமைந்துள்ளன. பதினாறு திருக்கைகள். வீறு கொண்டு எழும்  தோற்றம். அறுகோண சக்கரத்தில் பிரத்யக்ஷ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். பதினாறு திருக்கைகள். அவற்றில் பதினாறு ஆயுதங்கள். பின்புறம் முக்கோணத்தில் ஸ்ரீ யோக நரசிம்மர்!

இங்குள்ள ஸ்ரீமகா சுதர்சனரை வழிபட்டால் நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும் பெறுவதுடன் வேண்டுவோரின் கோரிக்கையும் நிறைவேறுவது உறுதி.

வட புறத்தில் நிகமாந்த மகாதேசிகனும், நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் உடையவரும் தனிச்சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார்கள்.

இக்கோயிலில் தர விருட்சம் புன்னை மரம். இதன் அடிப்பகுதியில் ஸ்ரீராமபிரானின் திருவடிகள் பிரதிஷ்டை செய்ப்பட்டுள்ளன.

தெற்கு நோக்கிய தனி அலங்கார மண்டபத்தில் அவர் யார்! அட நம் அனுமன் அல்லவா! தூக்கிய வலக்கையும் வெற்றிக்சின்னமாகிய தாமரை ஏந்திய இடக்கையுமாக நின்ற திருக்கோலம்.

இங்கு மிகச் சிறப்பான அற்புத விஷயம் ஒன்றுள்ளது. ராசி மண்டபம்! மேற்கூரையில பன்னிரண்டு ராசி மண்டலம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.. அதற்கு நேராகத்  தரையில்  ராசிக்கட்டங்கள் அந்தந்த ராசிக்குரிய வண்ணங்களுடன் தீட்டப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்கேற்ற கட்டத்தின் நின்று வேண்டிக் கொண்டால் ராசி ரீதியான குறைகள் நீங்கி சகல காரியங்களும் சித்தியாகும்.

கோயிலின் வாயில்புறத்தில் எழில்மிகு ரத மண்டபத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் எழுந்தருளியிருக்கிறார். இவரை வழிபடுவோர்க்குத் தடையற்ற கல்வியும் தெளிவான ஞானமும் கிடைப்பது பற்றி ஐயமும் உண்டா என்ன!

தீர்த்தம் க்ஷீர புஷ்கரணி.

இக்கோயிலில் வைகானஸ் ஆகம விதிப்படி ஐந்து கால பூஜைகளும் பங்குனி அமாவாசை தொடங்கி ஸ்ரீ ராம நவமி வரை பிரம்மோத்ஸவமும் நடைபெறும்.

இது இன்றும் மராட்டிய  மன்னர்களின் வழித்தோன்றல்களில் அருமைமையான நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாபாஜி ராஜா பான்ஸ்லே யுடன் இந்து அறநிலையத் துறை இணைந்து நிர்வகிக்கிறது.

சரி ..இப்போது எந்தக் கோயிலிலிலும் இல்லாத மிகச் சிறப்பான ஒரு விஷயத்துக்கு வருவோம். வெளிச்சுற்றுப் பிராகாரத்துக்கு வந்தீர்களால் விழியகள் விரிய அப்படியே நின்றுவிடுவீர்கள். அதைப் பார்க்க மட்டும் காண ஒரு கோடிக்கண்களும் குறைந்தது பத்து மணி நேரமும் வேண்டும். இறைவா! இறைவா! என்னமாய் ஓவியங்கள் தீட்டி வைத்திருக்கிறார்கள்! நீங்கள் ராமயணக் காட்சிகளை எங்கு வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம். ஆனால் பந்தயம் கட்டுகிறேன். இங்குள்ள மிக வித்தியாசமான காட்சிகளை நீங்கள் எங்குமே பார்த்திருக்க முடியாது! ஸ்ரீமத் ராமாயணத்தை மிக ஊன்றிப்படித்திருந்தாலன்றி இந்தக் காட்சிகள் கண்முன் விரிவது  அசாத்தியம்!

ஓவியங்கள் பற்றி ஒரு வியப்பான விஷயம். வட இந்தியாவிலிருந்து ஐந்து பேர் வந்து இந்த ஓவியங்களை ராப்பகலாக வரைந்திருக்கிறார்கள். இதைவிட வியப்பு அவர்களில் மூவர் முகமதியர்கள். ஆனாலும் நிச்சயமாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் அருள் பெற்றாலன்றி இந்த எழிலான ஓவியங்கள் வரைவது அசாத்தியம். நீங்களே பாருங்களேன்.

More articles

Latest article