சென்னை:

ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட  கொளத்தூர் நகைக்கடை கொள்ளையன் நாதுராம் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள நகைக்கடையில்  மதிய உணவு இடைவேளையின்போது சீலிங்கை துளையிட்டு கடையினுள் நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்  நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி என அறிந்து, அவர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்தனர்.

அங்கு அவர்களை பிடிக்க முயன்றபோது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு பிறகு, ராஜஸ்தான் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி  நாதுராமையும் மற்றும் அவனது கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, புத்தாராம் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களை நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழக போலீசார் அவர்களை  நேற்று இரவு எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி முன்பு  ஆஜர்ப்படுத்தி விட்டு 3 பேரையும்  புழல் சிறையில் அடைத்தனர்.