லண்டன்: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்களை எடுத்திருந்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை எட்டும் வாய்ப்பை, 67 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் தவறவிட்டார் கோலி.

டெஸ்ட் போட்டி, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி-20 ஆகிய அனைத்தையும் சேர்த்து இந்த மைல்கல்லை எட்டவிருந்தார் கோலி. ஆனால், நேற்று ஆஃப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சதத்தை தவறவிட்டார் கோலி.

விரைவாக 20000 சர்வதேச ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில், தற்போது சச்சின் டெண்டுல்கரும் லாராவும் முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் 453 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை எட்டினர். அவர்களுக்கு அடுத்து, ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ்கள் ஆடி அந்த சாதனையை எட்டினார்.

நேற்றைய போட்டியில் கோலி 104 ரன்களை அடித்திருந்தால், 415 இன்னிங்ஸ்களில் 20000 ரன்களை அடித்த அதிவேக வீரர் என்ற சாதனையைப் படைத்திருப்பார். ஆனால் அது கைநழுவிப்போனது.

எனவே, அந்த சாதனையை எட்டுவதற்கு இன்னும் 37 ரன்கள் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில், அடுத்தப் போட்டியில் அதை நிகழ்த்துவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.