லண்டன்: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஏதேனும் உலக சாதனையை செய்யும் இந்திய அணி என்று எதிர்பார்த்தவர்கள், தப்பித்தோம் பிழைத்தோம் என்ற அளவிற்கு இந்திய அணி விளையாடிய லட்சணத்தால் நிச்சயம் அதிர்ச்சியில்தான் ஆழ்ந்து போயிருப்பார்கள்.

இந்த உலகக்கோப்பையிலேயே இதுவரை ஒரு போட்டியில்கூட வெல்லாத பலவீனமான அணியாய் இருக்கிறது ஆஃப்கானிஸ்தான். அப்படியான சூழலில், ஆஃப்கானிஸ்தானை அனைத்து வகையிலும் இந்திய அணி கதறவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, இந்திய அணிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அணியினரின் குடும்பத்தினர் வீரர்களுடன் இருக்க அனுமதிக்கப்பட்டதுதான் என்கின்றனர். இதன் விளைவாக, பயிற்சி மற்றும் இதர முக்கிய விஷயங்களை அலட்சியம் செய்து, ஏதோ இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுலா வந்ததைப் போன்று இந்திய வீரர்கள், தங்களின் குடும்பத்தினருடன் ஊர் சுற்றி நேரத்தைக் கழித்தனர் என்றும் கூறப்படுகிறது.

இதனால்தான் துக்கடா அணியான ஆஃகானிஸ்தானுடன் செத்துப் பிழைக்கும் நிலை ஏற்பட்டது. உலக கிரிக்கெட் வீரர்களிலேயே மிக அதிகமாக வருமானம் ஈட்டும் இந்திய வீரர்கள், குறைந்தபட்சம் உலகக் கோப்பையில்கூட, சீரியஸாக இருந்து பயிற்சி செய்யாமல் இப்படி சொதப்புவது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவும், ரசிகர்களின் கோபத்தைக் கிளப்பியுள்ளது.