புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டு

Must read

மதுரை:

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட வகையான பூண்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. பூண்டுகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடப்பட்டு வந்தாலும், கொடைக்காணல் மலைப்பூண்டுக்கு தனிச்சுவை உண்டு.  மருத்துவப் பண்புகள் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு தற்போது புவிசார் குறியீடு தகுதி கிடைத்துள்ளது.

கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி கிராமங்களில் பிரதான பயிராக மலைப்பூண்டு சாகுபடியாகிறது. மருத்துவக் குணம், காட்டம், சுவை, உறுதித்தன்மை போன்ற தன்மைகளால், மற்ற பூண்டுகளில் இருந்து இவை தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இது தொடர்பாக  கொடைக்கானலில் உள்ள அன்னை  தெரசா மகளிர் பல்கலைகழகம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சேர்ந்து கடந்த 2018 ம் ஆண்டு மருத்துவக்குணம் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கோரி மத்திய அரசுக்கு விண்ணப் பித்திருந்தன.

இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மத்திய அரசு, தற்போது மலைப்பூண்டின் மகத்துவத்தை தெரிவிக்கும் வகையில் புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது.

ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற மருத்துவ குணம் மிக்க கொடைக்கானல் மலைப்பூண்டில், பிற பூண்டுகளை விட அதிக ஆர்கனோசல்பர் கலவைகள், பினோல்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. தலைவலி, ஆஸ்துமா, சோர்வு, உடல் வலி, வாயு, அஜீரணம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு இவை சிறந்தது என்பதுடன், சமையலுக்கு நல்ல நறுமணத்தையும் சுவையையும் அளிக்கக் கூடியது. இதன்மூலம் கொடைக்கானல் மலைப்பூண்டின் மருத்துவச் சிறப்பு குறித்து இனி சர்வதேச அளவில் தெரிந்து கொள்ளலாம்.

அதுபோல ஒடிசா ரசகுல்லாவுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை  28 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article