சென்னை

ழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு முடிக்க அமைச்சர் கே என் நேரு உத்தரவு இட்டுள்ளார்.

நேற்றி தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தற்போது பெய்த மழையினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய கே.என்.நேரு,

”தற்போது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக முடிக்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் படிந்துள்ள மண் துகள்களை முழுமையாக அகற்றவேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளிலும், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களிலும் ஆகாய தாமரைகளை அகற்றித் தூர்வாரும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு முடிக்க வேண்டும்.

அனைத்து மோட்டார் பம்புகள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும். மழை காரணமாக எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காதவகையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் தொடர் கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் அமைக்கப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.”

எனத் தெரிவித்துள்ளார்.