திருவனந்தபுரம்:

கேரளா அரசு தடை விதித்ததை தொடர்ந்து காளி கோவிலில் நடக்க இருந்த மனித ரத்த அபிஷேகத்தை கோவில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேவியோடு ஸ்ரீ வித்வயாரி வைத்தியநாத கோவில் உள்ளது. இங்குள்ள காளி சிலைக்கு மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஆண்டுதோறும் மார்ச் 12ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் காளியூத்து திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும்.

முதலின் தலைமை அர்ச்சகரின் ஒரு சொட்டு ரத்தம் எடுத்து தண்ணீரில் கலந்து அபிஷேகம் செய்யப்பட்டு வரும நடைமுறை இருந்து வந்தது. நாளடைவில் இந்த கோவிலில் ரத்த தானம் அளித்தால் நோய் குணமாகும் என்று பக்தர்கள் நம்பினர்.

இதையடுத்து பக்தர்கள் அபிஷேகத்துக்கு ஊசி மூலம் சிறிதளவு ரத்தம் தானம் அளித்து வந்தனர். இந்நிலையில் இந்த ரத்த அபிஷேக நிகழ்ச்சிக்கு கேரளா அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை கோவில் நிர்வாகம் நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து கோவில் தலைமை அர்ச்சகர் மணிகண்டன் கூறுகையில், ‘‘ இந்த பழங்கால சடங்கு நிகழ்ச்சியை செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும். அரசும், மக்களும் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இதில் ஒளிவு மறைவு எதுவும் கிடையாது. பக்தர்கள் தான் தங்களது ரத்தத்தை தாங்களாக முன்வந்து அளிக்கின்றனர். ஒரு சொட்டு ரத்தம் மட்டுமே தண்ணீருடன் கலந்து அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. இது சக்தியை ஏற்படுத்தும். இதன் காரணமாக தான் இந்து புராணங்களில் ரத்தம் சார்ந்த சடங்குகள் அதிகம் உள்ளது’’ என்றார்.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக அரசின் உத்தரவை நாங்கள் மீறமாட்டோம். இது போன்ற அறிவியல் சார்ந்த சடங்குகளை நிறுத்துவதற்கு முன்பு அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சொட்டு ரத்தம் மட்டுமே அபிஷேகத்தில் கலக்கப்படுகிறது’’ என்றனர்.