பெங்களூரு:

விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக யுனைடெட் பிரீவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் சொத்து மற்றும் பங்குகளின் மதிப்பு தற்போதைய சந்தையில் ரூ.12,400 கோடியை தாண்டிவிட்டதாக அந்நிறுவனம் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வங்கிகளில் வாங்கிய ரூ. 6,000 கோடி கடன் மற்றும் அதற்கான வட்டியையும் சேர்த்து அடைக்க இது போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது மூத்த வக்கீல் சஜன் போய்யா கூறுகையில், ‘‘கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவன சொத்து மதிப்பு ரூ.13,400 கோடியாக இருந்தது. சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தற்போது ரூ.12,400 கோடி மதிப்பை அடைந்துள்ளது. அனைத்து கடன்களின் மதிப்பும் ரூ.10,000 கோடிக்குள் தான் உள்ளது’’ என்றார்.

‘‘இந்நிறுவன சொத்துக்களை அமலாக்க துறையினர் முடக்கி வைத்திருப்பதால் அதன் மீதான கூடுதல் டெபாசிட் அல்லது வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும்’’ நீதிமன்றம் முன்னர் நடந்த விசாரணையின் போது கருத்து தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.