ஐதராபாத்:

ஜப்பானில் மனித ஆற்றலுக்கு பற்றாகுறை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து 2 லட்சம் ஐடி (தகவல் தொழில்நுட்பம்) தொழில் வல்லுனர்களை பணியமர்த்த அந்நாடு முடிவு செய்துள்ளது.

ஜப்பானில் தற்போது 9.20 லட்சம் ஐடி வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர். ஜெட்ரோ மற்றும் பெங்களூரு சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் இந்தியா -ஜப்பான் கூட்டு கருத்தரங்கம்  ஐதராபாத்தில்  நடந்தது.

இதில் கலந்துகொண்ட ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு துணைத் தலைவர் ஷிகேகி மேதா கூறுகையில், ‘‘தற்போது 2 லட்சம் இந்திய ஐடி வல்லுனர்கள் தேவைப்படுகிறார்கள். 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 8 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக திறன் படைத்த தொழில் வல்லுனர்களுக்கு ஜப்பான் கிரீன் கார்டு வழங்குகிறது. ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கு நிரந்த குடியுரிமை அந்தஸ்து வழங்கவும் ஜப்பான் தயாராக உள்ளது.

டிரைவர் இல்லாத கார்கள், அதிக தூரம் பறக்கும் ஆளில்லா விமானம், தானியங்கி விமானம் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களை நோக்கி ஜப்பான் பயணிக்கிறது. இது இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற பெரும் உதவியாக இருக்கும். மற்ற நாடுகளில் எங்கும் கிடைக்காத அளவுக்கு அரசின் சலுகைகள் இங்கு கிடைக்கும்’’ என்றார்.

1990ம் ஆண்டு முதல் சீனா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்ஸிங் முறையில் ஆட்கள் தேர்வு செய்யும் பணியை ஜப்பான் ஒப்படைத்துள்ளது. இது தவிர குறிப்பாக ஐதராபாத்தில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஜப்பான் முடிவு செய்துள்ளது. ஐதராபாத்தில் ஜெட்ரோ பார்மா தொழிலில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் தற்போது ஆயிரத்து 369 ஜப்பான் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 4 ஆயிரத்து 838 மையங்களில் 3.69 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் ஜப்பான் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.