திருவனந்தபுரம்:

பந்த் என்பது கேரளாவில் அன்றாட நடைமுறைகளில் ஒன்றாகிவிட்டது. இந்த 2017ம் ஆண்டில் மட்டும் இது வரை 19 பந்த் நடந்துள்ளது. இதில் 9 பந்த்க்கு பாஜ அழைப்பு விடுத்ததாகும். ‘‘ஒரு நாள் நூறு சதவீத பந்த் நடந்தால் ரூ. 900 கோடி இழப்பு ஏற்படும்’’ என்று இந்திய தொழிற் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

‘‘முன்பு பந்த் என்பது மாநில முழுவதும் நடக்கும். ஆனால் தற்போது மாவட்ட வாரியாக பந்த் நடக்கும் புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது’’ என்று காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜூ பி. நாயர் தெரிவித்துள்ளார்.

இவர் பந்த் கலாச்சாரத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் என்று அதற்கு எதிரான இயக்கம் ஒன்றை கடந்த 2010ம் முதல் தொடங்கி நடத்தி வருகிறார். இவர் மேலும் கூறுகையில்‘‘கடந்த மார்ச் மாதம் மிஷேல் சாஜி என்ற இளம் பெண் போலீஸ் விசாரணையில் இறந்தார். இதற்கு நீதிவிசாரணை கோரி எர்ணாகுளம் மாவட்டம் பிரவோம் பகுதியில் பந்த் நடந்தது.

இதை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட அளவிலான பந்த் எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு மக்களை திரட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது’’ என்று நாயர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜ சார்பில் நடந்த மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன. இதை எதிர்த்து வழக்கு தொடர பந்த் எதிர்ப்பு குழு முடிவு செய்தது. பாஜ மாநில தலைவர் கும்மண்ணன் ராஜசேகரன் மற்றும் சிலர் மீது போலீசாருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாயர் கூறுகையில் ‘‘அரசியல் ஆயுதமாக பந்தை அனைத்து அரசியல் கட்சிகளும் கையில் எ டுத்துக் கொள்கின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள், எதிர்விணைகள் குறித்து சிந்திக்காமல் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதனால் மக்கள் வலுக்கட்டாயமாக அச்சத்துடன் வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பந்த்க்கு அழைப்பு விடும் அரசியல் கட்சிகள் அதை நூறு சதவீதம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றன.

ஆனால் மக்கள் இதற்கு அமைதியாக இருந்து விடுகிறார்கள். பந்த் எதிர்ப்பு குழுவில் உள்ள தன்னார்வலர்கள் தங்களது வாகனங்களை அமைப்பில் பதிவு செய்துள்ளனர். பந்த் அறிவிக்கப்பட்டவுடன் இந்த வாகனங்களில் பந்தக்கு எதிரான பேனர்களை ஏந்தியும், ஸ்டிக்கர்களை ஒட்டியும் விழிப்புணர்வில் ஈ டுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘பந்த் காரணமாக ரயில் நிலையங்களில் சிக்கி தவிக்கும் பயணிகள் தன்னார்வலர்களின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் இலவசமாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. பந்த் காரணமாக சேதப்படுத்தப்படும் தனியார் சொத்துக்கள், வாகனங்களுக்கு இழப்பீடு கோரிபந்த் எதிர்ப்பு குழுவில் உள்ள வக்கீல்கள் மூலம் இலவசமாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர உதவி செய்யப்படுகிறது.

இது ஒரு நீண்ட கால போராட்டம். இதில் பொதுமக்களை ஒன்றிணைக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் ஒன்றிணைந்து மாநில நலனுக்கு கேடு விளைவிக்கும் பந்தை எதிர்க்க வேண்டும். கடந்த 2015ம் ஆண்டில் பந்த் ஒழுங்குமுறை மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்று ராஜூ நாயர் தெரிவித்தார்.