திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், அரசு அலுவலகங்களிலும் பெண்களின் தேவைக்காக நாப்கின் வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.  இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு  கடந்த 2018-ம் ஆண்டு, புதிய சுகாதாரக் கொள்கையைக் அமல்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவிகள் பயன்படுத்துவதற்காக இலவச நாப்கின் வழங்கும் எந்திரங்களையும், எரிக்கும் எந்திரங்களையும் நிறுவ உத்தரவிட்டது. அதன்படி  இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் அடுத்த நகர்வாக தற்போது, பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரங்களையும், நாப்கின்களை எரிக்கும் எந்திரங்களையும் நிறுவ கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து  சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா  வெளியிட்ட அறிவிப்பில், மாதவிடாய் காலத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது’ ‘ பெண்கள் பணியாற்றும் அரசு அலுவலகங்கள் அவர்கள் அணுகுவதற்கு இலகுவாகவும், சூழலும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். இதன்படி பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரம் நிறுவப்படும்.

முதல்கட்டமாக பெரிய அரசு அலுவலகங்களிலும், அதைத்தொடர்ந்து அதிகமான பெண்கள் பணியாற்றும் அலுவலகங்களிலும் இந்த நாப்கின் வழங்கும் எந்திரம், எரிக்கும் எந்திரம் நிறுவப்படும். இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.