திருவனந்தபுரம்:

கேரள சட்டமன்றத்தில் அரசு தயாரித்து கொடுத்த உரையில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை வாசிக்காமல் ஆளுநர் சதாசிவம் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில சட்டமன்றத்தின் இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை அரசு தயாரித்து கொடுப்பது வழக்கம். இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிவிட்டு பின்னர் சட்டமன்றத்தில் வாசிப்பார்.

இந்த வகையில், கேரளா அரசு தயாரித்த ஆளுநர் உரையில், ‘‘கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மதிக்காமல், மாநில அரசை மீறி மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்களை நேரடியாக கட்டுப்படுத்துகிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உரையில் நகலில் இந்த வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த வரிகளை ஆளுநர் சதாசிவம் படிக்காமல் தவிர்த்து விட்டார். கேரளாவில் சில மதவாத அமைப்புகள், கலவரங்களை தூண்ட திட்டமிட்டுள்ளது என்ற வரிகளையும் ஆளுநர் படிக்கவில்லை.

மேலும், ‘‘சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் கேரளா முதன்மை மாநிலமாக உள்ளது. வாழ்க்கை தரத்தில் உயர் இடத்தில் உள்ளது. சில மதவாத அமைப்புகள் கேரளாவில் வன்முறையை தூண்ட திட்டமிட்டபோதும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது’’ போன்ற வாசகங்களையும் ஆளுநர் படிக்கவில்லை.

இதுகுறித்து கேரள முதல்வர் அலுவலகம் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.