திருவனந்தபுரம்

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒரு பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்த போது, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் அதை செல்போனில் பதிவு செய்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகப் பிரபல நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைதான பல்சர் சுனில் என்பவரிடமிருந்து, பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை காவல்துறையினர் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அக்காட்சிகளை நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் செல்போனில் போட்டுப் பார்த்ததாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும், நடிகை தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் திலீப்பின் வழக்கறிஞர்கள், அனைத்து நெறிமுறை மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கும் எதிராக, சாட்சியங்களைச் சிதைத்து, சட்டத்திற்குப் புறம்பாகச் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்துவதன் மூலம் நீதி நிர்வாகத்தில் தலையிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் வழக்கு விசாரணையை நடத்தும் நீதிமன்ற பாதுகாப்பில் மெமரி கார்டு வைக்கப்பட்டிருந்தபோதும், தாக்குதலின் காட்சிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நடிகை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மற்ற வழக்குகளைப் போலல்லாமல், இந்த வழக்கில் மெமரி கார்டுதான் நேரடி ஆதாரம் என்றும், எனவே, நீதிமன்ற பாதுகாப்பில் உள்ள மின்னணு ஆவணங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களைப் பரிந்துரைக்க வழக்கறிஞர் ரஞ்சித் மராரை அமிகஸ் கியூரியாக நியமித்து உள்ளது.

இந்த விசாரணையைத் தள்ளிவைக்கக் கோரி நடிகர் திலீப் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விசாரணைக்கு திலீப் ஏன் அச்சப்பட வேண்டும் எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு நடிகையின் மனு மீதான தீர்ப்பையும் ஒத்திவைத்துள்ளது.