மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2022-23 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பம் பிப். 28 முதல் மார்ச் 21 வரை ஆன்லைனில் பதிவு செய்யப்படும் நிலையில் இந்த வயது வரம்பு திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளதால் பள்ளிகளில் சேர ஆளில்லாமல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஓராண்டு படிப்பு வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 5 வயது நிறைவடைந்த மாணவர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க முடியும் என்று இருந்த நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பில் சேர 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கை காரணமாக இந்த வயது வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட பள்ளிகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குறைந்த கட்டணம் என்பதால் தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளிகளில் சேர்க்க பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

பெரும்பாலான இடங்கள் இடமாறுதலுக்கு உண்டான மத்திய மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிலையில் 25 சதவீத இடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் நர்சரி பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. முடிந்ததும் 5 வயது நிறைவடைந்த மாணவர்களை நாடு முழுவதும் உள்ள இந்த பள்ளிகளில் சேர்க்க விரும்புகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு வயது வரம்பு 6 என்று நிர்ணயிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு 5 வயது நிரம்பிய மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வரும் நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவாகவே இருக்கும் என்றும் பெரும்பாலான இடங்கள் காலியாக இருக்கும் சூழல் உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், குறைந்த பட்ச வயதை ஒன்றாம் வகுப்பில் உயர்த்துவதற்கு பதில் நர்சரி பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கான வயதை 3 ல் இருந்து 4 காக உயர்த்தினால் மட்டுமே இந்த சிக்கல் தீரும் என்றும் இல்லையென்றால் நர்சரி பள்ளியில் இருந்து தொடக்க பள்ளியில் சேர ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் நிலை உள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.