கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அகலிகை! துரை நாகராஜன்

Must read

அத்தியாயம்: 4
 
அகலிகை அவள் நாட்டியம் ஆடுகிறாள்.  ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிறான் ஒரு மஹா புருஷன்! அவன் அபாரம் என்கிறான். அனேகமாய் அவன் கண்கள் கச்சை கட்டிய தாமரை மொட்டுக்களைத் துகில் உரித்து கொண்டிருக்கலாம்.  ஆடுபவளுக்கு இது புரிந்தாலும், அதனால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை.
அந்த மஹாபுருஷனின் எதிரில் காலியாக இருக்கும், தங்கத்தால் செய்யப்பட்ட ‘மதுக்கோப்பையை பணிப்பெண் சோமபானத்தால் நிரப்பிவிட்டுப் போகிறாள்.  இந்த ஒரு கோப்பை மதுவோடு அவன் நினைவு தப்பிவிடுவான் என்கிற சேதியை அடிக்கடி காணாமல் போகிற கருவிழிச் சொன்னது.
நாட்டியம் ஆடுபவள் கால்கள் சலங்கையோடு உற்சாகத்தையும், கட்டிக் கொண்டது.  அதில் கரை உடைத்துச் சாடும் வெள்ளத்தின் உற்சாகம் இருந்தாலும் நாட்டியத்தில் பிசகேதும் இல்லை.  சிருஷ்டி அப்படி!
அவள் வேறு யாருமல்ல.  விஷ்ணுவின் தொடை யில்  பிறந்த ஊர்வசி.  நாட்டியத்தை  ரசிப்பவளோ இந்திரன்.  நாட்டியம் இந்திர சபையில்தான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்திரன் கையிலுள்ள மதுக்கிண்ணம் எந்தக் கணத்திலும் நழுவிக் கீழே விழலாம்.  அப்போது “அற்புதம்” என்கிறது ஒரு குரல்.
அங்கே நாரதர் நின்று கொண்டிருக்கிறார்.
‘இவர் பூலோகம் போவதாக அல்லவா சொன்னார்.  இந்திரனுக்குப் பாதி போதை இறங்கிவிட்டது.  இருக்கையிலிருந்து எழுந்து விட்டான்.  உடம்பு லேசாகத் தள்ளாடத்தான் செய்கிறது.
“என்ன இந்திரா, நாட்டியம் பார்க்கிறாயாக்கும்?” என்று கேட்கிறார் நாரதர்.
சிரிக்க முயன்ற இந்திரன், “யார் அங்கே, தேவ முனிவர் அமர்வதற்கு ஆசனம் தயார்படுத்துங்கள்.. உம்..சீக்கிரம்” என்கிறான்.
“அமர்ந்து…”
“நாட்டியம் பார்க்கத்தான்…”
“இங்கே நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அங்குபோய் அவள் நடப்பதைப் பார்க்க லாம்…”
“என்ன சொல்கிறீர் நாரதரே?அவளா?யார்?” வேட்டை நாயின் தீவிரத்துடன், ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளக் கேட்கிறான் இந்திரன்.
“பெயர் அகலிகை.  பூலோகத்தின் பொக்கிஷம்…”
“பேரழகியோ?”
“தேவலோகப் பெண்கள் அத்தனை பேரை விடவும் அழகி.  அவளை இங்குள்ள பெண்களோடு ஒப்பிடுவதே தவறு இந்திரா.  அவளைப் பார்த்ததும் எனக்கு நீதான் ஞாபகத்துக்கு வந்தாய்.  உடனே திரும்பி வருகிறேன்.  வரும்போது, வழியில் அவள் அழகை தம்புராவில் வாசித்துப் பார்த்தேன்.  அதில் நான் தோற்றவிட்டேன்” என்றார் நாரதர்.  முகத்தில் இன்றைய கலகத்தை இந்திர லோகத் தில் தொடங்கிவிட்ட சந்தோஷம் தெரிந்தது. ‘நாராயணா’ என்று சொல்லிக் கொண்டார்.
அது இந்திரனுக்கோ ‘அகலிகை’ என்று கேட்கிறது.  நாரதரின் இசைக்கே கட்டுப்படாத அழகு என்றால் நிச்சயம் நாம் பார்க்க வேண்டிய அழகுதான்’ என்று எண்ணிக் கொண்டான்.
கலகத்தைத் தொடங்கி வைத்த திருப்தியில் நாரதர் வெளியேறிவிட்டார்.  பதறி அடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடுகிறான் இந்திரன்.

“தேவ முனி, பூலோகத்தில் என்று மொட்டையாய்ச் சொன்னால் அகலிகையை நான் எங்கு போய்த் தேடுவது? வசிக்கும் இடத்தையும் சொல்லிவிட்டால்…”
இழுத்தபடியே இந்திரன் தலையிலுள்ள கிரீடத்தை சொறிந்தான்.
“காமம் ஏற்பட்டுவிட்டால் உன் கிரீடத்துக்குக் கூட நமைச்சல் எடுக்கிறதா இந்திரா?” என்று கேட்ட நாரதர்.
“முதலில் முகத்தைத் துடைத்துக் கொள்.  மிதிலை நகரை அறிவாய் அல்லவா இந்திரா.  அதற்கு தென்மேற்கே சில யோசனை தூரம் நடந்தால் கங்கை நதி குறுக்கிடும்.  அதன் அருகே அழகான பூஞ்சோலை இருக்கும்.  அங்கு தான் ஆசிரமத்தில் வசிக்கிறாள்.”
“அந்த அகலிகை.மகாலட்சுமியின் புன்னகை.  ஊர்வசியின் தேகக் கட்டமைப்பு, மேனகையின் நடை நளினம், ரம்பையின் துள்ளிப்புரளும் கண்கள், திலோத்தமையின் கழுத்து இவைகளைக் கொண்டு சிருஷ்டிக்கும் உருவத்தைப் போல் இருப்பாளா?”
“உன் தவிப்பு புரியாமலில்லை இந்திரா.  நிம்மதியை எந்த வார்த்தை கொண்டு புரிய வைக்க முடியும்? அது உணரப்பட வேண்டியது அல்லவா? அகலிகையின் அழகும் அத்தகையதுதான்.”
இத்தனையும் கேட்ட பிறகு இந்திரனுக்கு தேவலோகத்தில் இருப்புக் கொள்ளவில்லை.  அவன் மனசு நிலத்தில் விழுந்த விரால்மீனாய்த் துடித்தது.  அந்தக் கணமே பூலோகத்துக்குப் புறப்பட்டு விட்டான்.
கங்கையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  இன்னும் சற்று நேரத்தில், சந்திரன் வானத்துக்கு வந்துவிடுவான்.  மாலை நேரமாகிவிட்டதால் பூக்களின் முகங்கள் தொங்கிப்போய் – காதலனைப் பிரிந்த காதலியின் கண்களைப் போல களை இழந்து காணப்படுகிறது சோலை.
ஆசிரமத்தில் – தானியத்தில் கல் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள் அகலிகை.  காலையிலிருந்தே அவள் கணவன் கௌதமன் கட்டி வைத்த தானிய மூட்டை போல் – தவத்தில் ஈடுபட்டிருக்கிறான்.  ஆடாமல் அசையாமல்.
பச்சைக் கிளியொன்று  ‘கிக்கீ கிக்கீ’ என்று பயக்கூச்சல் போடுகிறது.  என்ன ஆபத்தோ என்று நினைத்த அகலிகை தானியத்தை வைத்துவிட்டு ஓர் உயிரைக் காப்பாற்றும் உத்வேகத்தில் எழுந்து ஓடுகிறாள்.

சத்தம் கேட்ட இடத்திற்கு வந்து பார்க்கிறாள்.  கிளியைக் காண வில்லை.  எதுவும் அசம்பாவிதம் நடந்ததற்கான சுவடும் காணப்படவில்லை.  சுற்றித் தேடுகிறாள்.
சற்றுத் தள்ளி ஒரு கருங்காலி மரம், அதன் அடியில் இரண்டு பாம்புகள் ஒன்றையொன்று பிணைத்துக் கொண்டு முறுக்கிய ‘கயிற்று வடம்’ போல் காட்சி தருகின்றன.  அகலிகை அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டே நிற்கிறாள்.
அவளிடமிருந்து பெருமூச்சு வெளியேறியது.  பாம்புகள் விடுகிற ‘புஸ்ஸ் என்ற மூச்சுக்கு, சற்றும் சளைக்காத பெரு மூச்சு அது.  ஆனால் பாம்பின் மூச்சில் இருந்த ஆனந்தம் அகலிகை மூச்சில் இல்லை.  ஆதங்கம்தான் இருந்தது.
எதையோ பறிகொடுத்ததுபோல் உணர்கிறாள்.
கணவனைப் பார்க்கிறாள்.  அவன் தவத்தில்தான் இருக்கிறான்.  இவளுக்கு ஏற்படுகிற தாபத்தை எப்போதுமே தீர்த்து வைப்பது கங்கைநதிதான். ஆஸ்ரமத்துக்குப் போய் மாற்றுவதற்கு ஆடை எடுத்துக் கொண்டு கங்கையை நோக்கி நடக்கிறாள்.
வானத்திலே ஒரு கழுகு வட்டமிடுகிறது.
அகலிகை பார்க்கிறாள்  எங்கே பாம்புகளின் ஆனந்தத் தவத்துக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று மனசு பதைபதைக்கிறது.  அந்தக் கருங்காலி மரத்தை நோக்கி ஓடுகிறாள்.  பாம்புகளின் காதல் தவத்தைக் காப்பாற்றும் தீவிரம் அவள் கால்களில் இருந்தது.
ஓடியவள் திடீரென ‘அம்மா’ என்று கால்களை மடக்கிக் கொண்டு அமர்ந்துவிடுகிறாள்.  வழியில் கிடந்த கல் அவள் பாதங்களைப் பதம் பார்த்து விட்டது.  மலர்களை விட மென்மையான அகலிகை அழுது விடுகிறாள் – வலிக்குமே!
அகலிகை அழுவதைப் பார்த்து ‘ஐயோ!’ என்று ஓடி வருகிறான் ஒரு இளம் துறவி.  மறுபடியும் பார்க்கச் சொல்கிற வசீகரம் உடையவனாக இருக்கிறான்.
“அம்மா நீங்கள் யார்? எதற்காக அழுகிறீர்கள்?” என்று கேட்கிறான்.  மெல்லத் தலை நிமிர்த்திப் பார்க்கிறாள் அகலிகை. இதமான குரலுக்குச் சொந்தக்கார அந்த இளம் துறவி-மிகுந்த அடக்கத்துடன் நிற்கிறான்.
“கல் குத்திவிட்டது.”
“இந்தக் கற்கள் இப்படித்தான்.  பொல்லாததுகள்.” இப்போது அவன் பேச்சில் குறும்பு தெறித்தது. ” நன்றாகவே பேசுகிறீர்கள்” என்கிறாள் அகலிகை.  அவன் பதில் சொல்லாமல் சிரிக்கிறான்.  அந்தச் சிரிப்பும் மிக நன்றாகவே இருந்தது.
வந்திருப்பவன் வேறு யாருமல்ல – இந்திரன்.  இன்று காலையில் இருந்தே அகலிகையை அவ ளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான்.  எப்படி அவள் முன்னே செல்வது… என்ன பேசி நட்பை வளர்ப்பது… என்று தெரியாமல் தவித்தவனுக்கு கல் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்துவிட்டது.  அந்தக் கல்லை நன்றியுடன் பார்த்தான்.
“எங்கு செல்ல வேண்டும் உங்களுக்கு? நான் உதவுகிறேன்.  வலிக்குமே.  எப்படிப் போவீர்கள்?”
“இது சாதாரண வலிதான்.  நன்றி” என்றாள் அவன் கண்களைப் பார்த்து.
அவனுடைய கண்கள் அகலிகையின் அழகான பிரதேசங்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன.  இழுத்துப் போர்த்திக் கொண்ட அகலிகை அவனை எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.
‘விரகதாபத்தில் வெந்து செத்தாலும் வேறெருவனுக்கு முந்தி விரிக்கப் பயப்படுகிற இவளை எதற்குப் பிரம்மன் இவ்வளவு அழகாகப் படைத்துத் தொலைக்க வேண்டும்?” என்று தனக்குள் கேட்டுக் கொண்ட இந்திரன் “கோபமும் ஒருவகை அழகு” என்கிறான்.

‘போகிறாயா அல்லது சபித்தே சாம்பலாக்கவா?’ என்பதுபோல் பார்க்கிறாள் அகலிகை.  இவள் செய்யக் கூடியவள்தான்.
‘அழகான ராட்சசியே! உன்னை அடை யாமல் இங்கிருந்து போகப் போவ தில்லை.  அந்தக் கிழட்டு முனிவன் கௌதமனின் மேல் கண் மூடித்தன மான காதலில் இருப்பவளே! உன்னை எப்படி அடைவது என்று எனக்குத் தெரியும்.  வாலிபனாக வந்து உன்னை மகிழ்விக்கலாம் என்று பார்த்தேன்.  நீ வசப்படவிலலை.  வருகிறேன்.’
இன்றைக்கும் தன் பதிவிரதத் தன்மையை காப்பாற்றிவிட்ட பெருமிதத்தில் ஆஸ்ரமத்துக்கு வருகிறாள் அகலிகை.
‘தானிய மூட்டை’ தவத்தில்தான் இருக்கிறது.
நள்ளிரவு  “கொக்கரக்கோ” என்று காட்டுச் சேவல் கூவுகிறது.
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுகிறான் கௌதமன்.
இருட்டில் தடவி, கமண்டலத்தையும், தண்டத்தையும் தேடுகிறான்.  அவனுக்கு வலப்புறத்தில் சற்று தள்ளிப் படுத்திருக்கும் அகலிகையின் மேல் கை படுகிறது.
நெருப்பைத் தொட்டு விட்டவன் போல் ‘படக்கென்று கையை இழுத்துக் கொண்ட கௌதமன் ‘சிவ சிவா’ என்கிறான்.  கங்கையில் ‘மனைவியைத் தீண்டிய அபசாரத்துக்கும் சேர்த்து ஒரு முழுக்கு போட வேண்டும்’  என்று நினைக்கிறான்.
கமண்டலத்தையும் தூக்கிக் கொண்டு நடக்கிறான்.  கௌதமன் கை பட்டதுமே விழித்துக் கொண்ட அகலிகை புரண்டு படுக்கிறாள்.  இன்றைய இரவும் வழக்கம்போல் வீண்தானா என்று அவள் உணர்ச்சிகள் கேட்கின்றன.
சற்றைக்கெல்லாம் கதவு தட்டப்படுகிறது.
“அகலிகை…அகலிகை…”
“இது நம் கணவரின் குரல் அல்லவா.  என்றைக்கும் இல்லாமல் பேச்சில் காதல் குழைகிறதே….” கௌதமனின் கைப்பட்ட இடத்தை தொட்டுப் பார்க்கிறாள்.  அது விலாபுரத்துக்கு சற்றுமேலே.  இந்தக் குரல் மாற்றத்துக்கு இதுதான் காரணமா…
தினமும் இருட்டில் கமண்டலத்தைத் தேடி அவர் கைகள் இதே இடத்தில் படவேண்டும் ன்று வேண்டிக் கொண்டே போய் கதவைத் திறக்கிறாள்.
“நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும்…” கன்னம் நாணம் பூசுகிறது.
“என்னை சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறாய்….”
மல்லிகைப் பூவைப்போல், சிரிக்கிறாள் அகலிகை.  “வா அன்பே பேசிக் கொண்டிருக்கலாம்” என அவள் இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்டே நடக்கிறான்.

இவருக்குள் இத்தனை வலிமையை – எங்கே மறைத்து  வைத்திருந்தார்? எலும்பு நொறுங்கி விடும்போல் இருக்கி றதே.  அது கூடச் சுகமாகத் தான் இருக்கிறது. அவனோடு இணைந்து கொண்டே நடக்கிறாள்.  அவள் முகம் அவன் மார்போடு சாய்ந்திருக்கிறது.  அவள் இதயம் இப்போது லப்-டப் என்று துடிக்கவில்லை.  ‘சுகம் சுகம்’ என்கிறது.
கட்டிலில் வைத்து அவன் காட்டிய வித்தையில் அவள் கதிகலங்கிப் போனாள்.  இத்தனை நாள் இதை எங்கே ஒளித்து வைத்திருந்தார்? இவர் உடம்புக்குள் பூதம் ஏதும் புகுந்து விட்டாதா?
நல்லது.
இந்த இரவு இப்படியே நீளட்டும்.
அகலிகை இப்படி நினைத்து முடிக்கவில்லை.  கதவு தட்டப்படுகிறது.  “அம்மா அகலிகை…தாயே..”
கூப்பிடுவது கணவர் கௌதமன் குரல் போல் இருக்கவே – பதறியடித்த அகலிகை தன்னோடு ஒருடலாகி விட்டவன் முகத்தைப் பார்க்கிறாள்.  கௌதமன்தான் இங்கேயும்!
“அம்மா அகலிகை…தாயே!” மறுபடியும் கௌதமன் குரல்.  எந்த உணர்ச்சியும் இல்லாத வெறும் குரல்.
தன்னைக் கட்டித் தழுவி இருப்பவனை உதறிவிட்டு எழுகிறாள்.  “யார் நீ” என்கிறாள்.  அவன் கை பட்ட இடமெல்லாம் பற்றி எரிகிறது.  உடம்புக்குள்ளேயும் காந்தல் எடுக்கிறது.
வந்தவன் முகம் வெளிறிற்று.  கைகளில் நடுக்கம்.  “என்னை மன்னித்து விடு” என்று அகலிகை யின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான்.
“யாரடா நீ.”
“தேவேந்திரன் இந்திரன்…”
வெளியே கதவு கட்டப்படுகிறது – முன்னைவிட பலமாக.
அவனை – தேவேந்திரனை – காலால் உதைத்துத் தள்ளிவிட்டு கதவைத் திறக்க இரண்டு எட்டு வைத்தவள் ஆடையை அள்ளி அலங்கோலமாய் உடம்பில் சுற்றிக் கொண்டாள்.
கதவைத் திறக்கிறாள்.
கண்களில் தீப்பறக்க நிற்கிறான் கௌதமன்.
அகலிகை நின்ற கோலமே என்ன நடந்தது என்பதை கௌதமனுக்கு உணர்த்தி விட்டது.
“யார் அவன்? இது எத்தனை நாளாய் நடக்கிறது?” என்கிறான்.  இப்போது குரலிலே உணர்ச்சி இருக்கிறது.
‘சிவ சிவா’ என்று காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்.  அகலிகை.
கோபாவேசத்தில் நிற்கும் கௌதமனைப் பார்த்த இந்திரன் பூனையாய் உருமாறி மெல்ல விட்டத்தின் வழியாகத் தப்பித்தான் (கடைசியில் கௌதமனிடம் மாட்டிக் கொண்டு சாபம் வாங்கினான்).
“அவன் உங்கள் உருவத்திலேயே வந்தான்.  நான் நீங்கள் தான் என்று நினைத்து ஏமாந்து விட்டேன்.  நான் ஏமாந்து விட்டேன்…” தலையில் அடித்து அழுதாள்.
“யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என்னைப் போலவே வேடமிட்டு வந்திருந்தாலும் – தொடுபவன் கணவனா? அன்னியனா என்ற வேறுபாடு கூடவா தெரியவில்லை? பாதகி.”
“நீங்கள் என்னை எப்போதோ தொட்டது.”
“என்னை எதிர்த்துப் பேசத் துணிந்து விட்டாயா? கணவனுக்குத் துரோகம் பண்ணியவளே!கல்லாகப் போ…”
கௌதமன் சொல்லி முடிக்கவில்லை.  அகலிகை கல்லாகிப் போனாள்.  எல்லாம் தவ வலிமை.
ஊழி பல கடந்தது.
அந்தக் கல் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து இந்திரனால் ஏற்பட்ட அழுக்கு எல்லாம் போய் விட்டது.
இனி அவள் சாபவிமோசனம் அடைந்தால் – மறுபடியும் பத்தினியாகி விடுவாள்.
அந்த கல்லின் பக்கத்திலேயே காத்துக் கிடக்கிறான் கௌதமன்.

தாடகை வனத்திலே – தாடகையை வதம் செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டே வருகிறார்கள்.  கூடவே விஸ்வாமித்திரன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருகிறான்.  அடிக்கடி தாடியை வேறு தடவி விட்டுக் கொள்கிறான்.
ராமன் ஓடுகிறபோது, அவன் காலின் இருந்து கிளம்பிய புழுதி அந்தக் கல்லின் மேல் படுகிறது.
என்ன ஆச்சர்யம்…!
அகலிகை மறுபடியும் பெண்ணாகி விட்டாள்.
சாபமே அதுதானே!  ராமன் கால்பட்டு அகலிகை சாபவிமோசனம் அடைவாள் என்பதுதானே.
கல் பெண்ணான அதியசத்தை விஸ்வாமித்திரனை அழைத்துக் காட்டுகிறாள் ராமன்.
“எல்லாம் உன் மகிமை ராமா.”
அகலிகையின்  முகத்தைப் பார்க்கத் திராணியற்றுப் போய் தலை கவிழ்ந்து நிற்கிறான் கௌதமன்.
அகிலிகைக்கும் தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது.
“அகலிகா நம் குமாரன் சதானந்தன் மிதிலையில் புரோகிதனாக இருக்கிறான்.  பார்த்துவிட்டு வரலாமா?” என்கிறான் தரையைப் பார்த்தபடி..
அகலிகையின் மௌனமே பதிலாகிறது.
கௌதமன் முன்னால் நடக்கிறான்.
அகலிகை தொடர்கிறாள்.
எதுவுமே இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
“அகலிகா பசிக்கிறதா?” என்று கேட்கிறான் கௌதமன்.  எதிரிலே இலந்தை மரம் பழத்துடன் நிற்கிறது.
“ஒரு கேள்விக்குத்தான் விடை தெரியவேண்டும்.”
“என்ன கேள்வி?”
“நீங்கள் முக்காலமும் உணர்ந்தவர் தானா என்பதில்தான் ஐயம்”
“இது உலகமே ஏற்றுக் கொண்ட விஷயம்தானே.  சந்தேகமே இல்லாமல் நான் சகலமும் அறிந்தவனே..”
“இந்திர நாடகம் நடந்த அந்த இரவு ஞாபகம் இருக்கிறதா.  புருஷன் தீண்டுதலுக்கும் பிற ஆடவன் தீண்டுதலுக்கும் வித்தியாசம் அறியத் தவறியதற்குத்தானே எனக்கு சாபம் தந்தீர்கள்?
கோழியாய்க் கூவிய இந்திரன் குரலுக்கு நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள்?” என்று கேட்டாள்.
அவள் கல்லாய்க் கிடந்தபோதும் – அவளுக்குள் காயாமல் இருந்த கேள்வி. ஆறாமல் இருந்த காயம்.  கேட்டுவிட்டாள்.
கௌதமன் என்ன பதில் சொல்லுவான்?
அவன் கல்லானான்.

More articles

3 COMMENTS

  1. In human life, mistakes are both side. when we failed to show affection towards our life partner there is a possibility changing the track after long waiting and hesitation. we read the such as news in daily news paper.

Latest article