அத்தியாயம்-13                                                                                               மேனகை

ன்று வந்துவிடுவாள், நாளை வந்துவிடுவாள் என்று தினமும் மேனகையை எதிர்பார்த்து ஏமாந்தனர் தேவர்கள். அழைத்து வருகிறேன் என்று போன காலதேவனிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை.

விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைக்கச் சொல்லித்தானே அனுப்பினோம். சென்ற வேலைதான் எந்தத் தடங்கலும் இல்லாமல் முடிந்துவிட்டதே. உடனே வரவேண்டியதுதானே.

மேனகை இல்லாமல் நாட்டிய மண்டபமே சோபை இழந்து கிடக்கிறது. ஊர்வசியும், ரம்பையும் என்னதான் நாட்டியம் ஆடினாலும் மேனகை நாட்டியம்போல் வராது.

மேனகை ஒற்றைப் பார்வை பார்த்தாலே உள்ளங்கள் பற்றி எரியும். ஒய்யாரம் குலுங்க ஒடிசியும், பாதமும் கலந்து ஆடினால் என்ன ஆகும் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

உரசினால் பற்றிக் கொள்ளும் நெருப்பைவிட அபாயமானவள் மேனகை. வெண்ணெயில் கொஞ்சமும், மாலை வெயிலில் கொஞ்சமும் சேர்த்துச் செய்யப்பட்டது போலிருக்கும் மேனகையின் மேனியைப் பார்த்தவர்கள் காதல் நோயில் கலங்குவது நிச்சயம்.

அந்த நம்பிக்கைதான் விஸ்வாமித்திரரின் தவம் கலைக்க மேனகையைத் தேர்ந்தெடுத்து பூலோகத்துக்கு அனுப்பச் சொன்னது.

அவளும் நம்பிக்கையைக் காப்பாற்றினாள்.

ஒரு வேளை மேனகையால் முடியாமல் போகுமானால் விஸ்வாமித்திரரின் யாகம் கலைத்து – மேகமூட்ட மன்மதனையும் அனுப்பினார்கள். அவனும் இல்லை, அசோகு, தாமரை, மா, நீலம் ஆகியவைகளாலான மலர் அம்பை தூக்கி கொண்டு சென்றான். அவன் மலரம்பு விட வேண்டிய தேவையே இருக்கவில்லை.

மேனகையின் நாட்டியமே மலரம்பு தொடுக்கும் வேலையை யும் சேர்த்துச் செய்தது.

கண்ணுவபுரிக்கு வடக்கு மூலையில் சோலையின் நடுவே தவமிருந்தார் விஸ்வாமித்திரர். பிரம்மரிஷி பட்டம் வாங்கியே தீருவது என்கிற வெறியில் கடுந்தவம் செய்தார்.

விஸ்வாமித்திரரின் தவ வலிமையால் பூலோகம், தேவலோகம் எல்லாம் தீப்பற்றி எரிந்தது. சூடு பொறுக்க முடியாத தேவர்கள் கங்கைக்குள் போய் விழுந்தார்கள். பூலோகவாசிகள் ‘ஆ,ஊ’ என்று சத்தம் எழுப்பியவாறே அங்குமிங்கும் ஓடினார்.

விஸ்வாமித்திரர் இருந்த சோலை மட்டும் நூறு நிலவு சேர்ந்து ஒளி வீசியதுபோல் குளுமையாய் இருந்தது. இதுவரை இருந்துவந்த வெப்பம் திடீரென இல்லாமல் போனது – பூலோகத்துக்கு வந்த மேனகைக்குள் வியப்பை ஏற்படுத்தியது.

அவள் நடக்கின்ற பாதையெங்கும் பல வகையான காட்டுப் பூக்கள் பூத்துக் கிடந்தன. மஞ்சளும், நீலமும், பச்சையும், சிவப்புமாக மலர்ந்த பூக்களெல்லாம் அவளைப் பார்த்து புன்னகைத்தன.

மேனகை, பூக்களைப் பறித்துக் கைகளிலும், கூந்தலிலும் சூடிக் கொண்டாள். நடந்தாள். கால் தண்டை ‘தகதிமி தகிட’ என்று கைதேர்ந்த மிருதங்க வித்வானின் வாசிப்புபோல் தாளம் தப்பாமல் ஓசை எழுப்பியது.

மேனகைக்குத் தெரியாமல், அவளைத் தொடர்ந்து வந்த மன்மதன் அனைவருக்கும் காமத்தீ மூட்டும் மன்மதன் – அவள் பின்னழகில் பற்றி எரிந்தான்.

தன் பின்னால் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பது தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள் மேனகை. அவள் கண்கள் விஸ்வாமித்திரரைத் தேடிக் கொண்டிருந்தது.

விஸ்வாமித்திரர் முன் நாட்டியம் ஆட வேண்டும் என்பதுதான் இந்திரன் இட்ட கட்டளை, அரசன் கட்டளையை மீற முடியாமல் வந்திருக்கிறாள்.

அதோ – அரச மரம்! அதன் அடியில்தானே விஸ்வாமித்திரர் தவமிருப்பதாய் சொன்னார்கள். சற்று எட்டி நடந்தாள். இதனால் இடைப்பகுதி இன்னும் வேகமாய் ஆடியது. மன்மதனின் இதயம் பறி போனது.

விஸ்வாமித்திரர் எதிரில் வந்த மேனகை, வளைந்து – பூமி தொட்டு வணங்கினாள். அபிநயம் பிடித்தாள். நடனம் இன்னும் ஆட ஆரம்பிக்கவில்லை.

அவள் மேனியின் வாசமும், சூடியிருந்த பூக்களின் வாச மும் காற்றில் மணம் பரப்பியது. அந்தக் கதம்ப வாசம் விஸ்வாமித்திரர் நாசியைத் தாக்கியது.

ஐம்புலன்களை அடக்கித் தவமிருந்தவரின் ஒரு புலன் விழித்துக் கொண்டது. கால்-தண்டை ‘கலீர் கலீர்’ என்று முழுங்க நாட்டியம் ஆட ஆரம்பித்தாள். தண்டையின் ஓசை முனிவரின் காதுக்குள் பாய்ந்தது. அந்த இசை லயத்தை ரசிக்க ஆரம்பித்தார். இப்போது இரண்டாவது புலனும் விழித்துக் கொண்டு விட்டது.

தவமிருந்த விஸ்வாமித்திரருக்கு தன் எதிரில் அற்புதம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று உள்ளுணர்வு உணர்த்தியது. இதற்கு மேலும் கண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மெல்லக் கண் திறந்தார். இதோ மூன்றவாது புலன் அவர் கட்டுப்பாட்டை மீறியது.

கண்களால் ரசித்தார். கவரிமான் போல் துள்ளித் துள்ளி ஆடும் மேனகையின் அழகில் தன்னை இழந்தார். இறை நாமம் உச்சரித்த வாய் அதை மறந்து ‘அபாரம் அற்புதம்’ என்ற வார்த்தைகளை மந்திரம் போல் சொன்னது. நான்காவது புலனும் கட்டுமீறிற்று.

நான்கு புலன்கள் – கடிவாளம் அறுத்துக் கொண்ட பின் ஐந்தாவது புலன் எத்தனை நாழிகை கட்டுப்பட்டு கிடக்கும்?

உடம்பு விழித்துக் கொண்டதும் விஸ்வாமித்திரரால் உட்கார முடியவில்லை. மெல்ல எழுந்தார்.

மேனகை இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறாள். தவம் கலையும்வரை ஆடவேண்டும் என்பது இந்திரன் கட்டளை ஆயிற்றே.

“விஸ்வாமித்திரா – வசிஷ்டரைவிட மாமுனிவர் ஆகவேண்டும் என்று தவமிருக்கிறாய். உன் தவத்திற்கு சோதனை வந்திருக்கிறது. புலன்களை அடக்கு. தவத்தில் வெல். இறை நாமத்தையே சொல்” என்று உணர்வு எச்சரித்தது.

கரையுடைத்த நதி நீர் யார் சொல்லிற்குக் கட்டுப்படும்? விஸ்வாமித்திரர் நிலையும் இதுதான். அவரையும் மீறிய ஒரு சக்தி அவரை வழி நடத்தியது. மேனகையை நோக்கி நடந்தார்.

முனிவர் தவம் கலைந்து தன்னை நோக்கி வருவதைக் கண்ட மேனகை – வந்த வேலை முடிந்ததென நினைத்தாள். நாட்டியத்தை நிறுத்தினாள்.

வெகுநேரமாய் ஆடியதால் – கால்கள் லேசாகத் தள்ளாடின. விழப் போனாள். விஸ்வாமித்திரர் ஓடி வந்து தாங்கிக் கொண்டார்.

அவர் இடது கை மேனகையின் இடையை வளைத்துப் பிடித்தது. அப்போது மேனகையின் மார்பு விஸ்வாமித்திரரின் நெஞ்சோடு அழுந்தியிருந்தது. மேனகைக்கும் ஏனோ விஸ்வாமித்திரரின் கைகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தோன்றவில்லை.

“பெண்ணே!” என்றார் விஸ்வாமித்திரர்.

“உம்” என்றாள் மேனகை.

இரண்டு வார்த்தைகளை மட்டும்தான் அவர்களின் உதடுகள் பேசிக் கொண்டன. ஆனால் கண்கள் கதை கதையாய் பேசின. விஸ்வாமித்திரரின் கைகள் மேனகையை வீணையாக்கியது. அவளும் சரஸ்வதிகையிலிருக்கும் மரகத வீணையைப் போல் சுருதி சுத்தமான இசையானாள்.

கூடல் முடிந்து – வேகமெல்லாம் வடிந்த பிறகுதான் விஸ்வாமித்திரருக்கு உறைத்தது. தன்தவத்தைக் கலைக்க தேவர்கள் செய்த சதி என்று புரிந்தது.

இயல்பிலேயே கோபக்காரரான விஸ்வாமித்திரர் இன்னும் கோபமானார். கண்களில் இருந்து நெருப்பு தெறித்தது. அதன் உக்கிரம் தாளாமல் எதிரில் நடந்த மான் ஒன்று சாம்பலாயிற்று.

இப்போது பிரபஞ்சமே குளிர்ந்துவிட்டது. விஸ்வாமித்திரரைச் சுற்றித்தான் சுட்டது. அந்த வெப்பத்திலும் எதிரில் மழையில் நனைந்த கிளிக்குஞ்சாய் நடுங்கிக்கொண்டு நின்றாள் மேனகை.

“பயப்படாதே பெண்ணே. எய்தவனை விட்டு அம்பை வதைப்பவன் இல்லை நான். பாவம். நீ என்ன செய்வாய். நாட்டியம் ஆடச் சொன்னார்கள். ஆடினாய். உனக்குத் தெரியாமல் இந்தச் சதி நடந்ததால் உன்னை மன்னிக்கிற«ன். போ”.. என்றார்.

“சுவாமி..”

“உன் எண்ணம் புரிகிறது மேனகை. உன்னைத் தழுவியதால் என்னைக் கணவனாய் வரிக்கப் பார்க்கிறாய். அந்த ஆசையைத் துடைத்துவிடு. நான் உலகத்தையே வெல்லும் முனிவனாக வேண்டியவன்..”

சொன்ன விஸ்வாமித்திரர் – அருகிலுள்ள தடாகத்தில் சென்று முழுக்குப் போட்டார். மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார்.

மேனகைக்கு மீண்டும் நாட்டியம் ஆடலாமா.. விஸ்வாமித்திரர் தவம் கலைக்கலாமா என்ற எண்ணம் ஏற்படத்தான் செய்தது. லட்சியத்துக்காக தவமிருப்பவரை அலைக்கழிக்க அவள் இதயம் ஒப்புக் கொள்ளவில்லை.

தள்ளிப்போய் அமர்ந்து – அவர் தவம் செய்யும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘சிவ நாமம் சொல்லி தவமிருப்பவரா சற்று முன் நம்மை அந்தப்பாடு படுத்தினார்” என்று நினைத்தாள். கன்னம் வெட்கத்தில் சிவந்தது.

அடிவயிற்றில் இனம் புரியாத இன்பப் பந்து உருண்டது.

குளத்தில் துணி அலசிக் கொண்டிருந்த மேனகை, குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்தாள். அப்படியே அள்ளி எடுத்தாள்.

இந்தக் குழந்தை விஸ்வாமித்திரர் தழுவியதற்குக் கிடைத்த பரிசு, மேனகையை வென்று போகப் பொருளாகப் பயன்படுத்தியவர்கள் மத்தியில் அவளுடைய பாசத்தைப் பங்குபோட வந்திருக்கும் தங்கப் புதையல்.

குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். தாயின் கதகதப்பில் குழந்தை அழுகையை நிறுத்திற்று. கால் உதைத்து, கை உதைத்துச் சிரித்தது.

மேனகை குழந்தையின் கன்னம், நெற்றி, காது, கண்கள் என்று முத்தமிட்டாள். என் தங்கம், என் செல்லம் என்று கொஞ்சினாள்.

மேனகைக்குள் தாய்மை விம்மியது. மார்புக் கச்சை நனைந்தது. ‘பசிக்குதாடா.. என் கண்ணு’ என்றாள். பசி போக்கினாள்.

இந்திரனைத் தூங்க வைக்க கின்னரர்கள் பாடுகிற தாலாட்டைப் பாடினாள். குழந்தை தூங்கிற்று. அதன் உதட்டிலே ஒய்யாரமாய் ஒரு குமிழ் புன்னகை உட்கார்ந்திருந்தது.

சுற்றிலும் பூத்துக் கிடந்த எந்தப் பூவின் சிரிப்பும் தன் மகளின் புன்னகைக்கு ஈடாகாது என்று நினைத்தாள்.

‘குழந்தை பசியால்தான் அழுதிருக்கிறது’ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவள், தாமரை இலை மீது குழந்தையைக் கிடத்தினாள்.

மீண்டும் குளத்தில் இறங்கி துணி அலசினாள்.

அது குழந்தை அசுத்தம் பண்ணிய துணி. குழந்தையின் அழுக்கைத் தின்ன மீன்கள் இப்படியா போட்டி போடும்?

குளத்திலே செவ்வல்லி, குவளை, அம்பல், செங்கழுநீர் யாவும் பூத்துக் கிடந்தன. ஒவ்வொரு பூவிலும் அவள் குழந்தையின் முகத்தைக் கண்டாள். அதன் பொக்கை வாய் சிரிப்பு அவளுக்குள் பூரிப்பை ஏற்படுத்தியது.

முட்டியளவு நீருக்குள் முனிபோல் எவ்வளவு நேரமாய் நின்று கொண்டிருந்தாளோ, “இப்படியே நின்று கொண்டிருந்தால் போதுமா மேனகை. தேவலோகத்துக்குப் புறப்படும் யோசனையே இல்லையா?” என்ற குரல்கேட்டு, திரும்பிப் பார்த்தாள்.

“காலதேவரா, வணங்குகிறேன்.”

“வணக்கம். இருக்கட்டும், புறப்படு.”

“இல்லை. நான் தேவலோகத்துக்கு வரவில்லை. பூலோகத்திலேயே இருந்து விடுகிறேன்.”

“அது முடியாது மேனகை. நீ அனுப்பப்பட்டது விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்கத்தான். வந்த வேலைதான் முடிந்து விட்டதே. வா போகலாம்.”

“நான் வர மறுத்தால்?”

“காலதேவன் கட்டளையிட்டால் கடவுளே மீற முடியாது மேனகை. நீ வருகிறாய். மீறினால் நீ சற்றுமுன் கொஞ்சிக் கொண்டிருந்த உன் மகளின் முடிவுரையை நான் எழுத வேண்டிவரும்.”

“அப்படி செய்து விடாதீர்கள். நான் வந்து விடுகிறேன்” என்றாள். ஓடிச் சென்று குழந்தையை எடுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

“போகலாம் காலதேவரே..”

“உன் குழந்தையை விட்டுவிட்டு வா. உனக்கு மட்டும்தான் தேவலோகத்தில் அனுமதி.”

“இவள் என் மகள். என் உயிர். தாய் செல்லும் இடத்தில் சேய்க்குத் தடை வருமா?”

“உன் மகளாய் இருந்தாலும் மானுடர்க்குப் பிறந்த பிள்ளை. பிள்ளையை அங்கேயே கிடத்திவிட்டு என் பின்னால் வா .. சற்று தாமதித்தாலும் உன் மகளின் உயிர்..”

“வேண்டாம் காலதேவரே..உங்கள் வாயால் அந்த வார்த்தையை சொல்லாதீர்கள்” என்றாள். காலதேவன் கருணை காட்டாதவர் என்பதை மேனகை அறிவாள். தாமதிக்கும் ஒவ்வொரு பெழுதும் மகள் உயிருக்கு ஆபத்து என்பதையும் அறிவாள்.

என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினாள் மேனகை. ஒரு கணம்தான்.

“காலதேவரே. நீர் சொன்னபடி வருகிறேன்.. என் மகளைக் காட்டு மிருகங்களிடமிருந்து காக்க வேண்டியது உமது பொறுப்பு.”

சம்மதித்தார் காலதேவர்.

மகளை ஆசை தீரப் பார்த்தாள், “காலதேவர் அனுமதித்தால் நாம் மீண்டும் சந்திக்கலாம் மகளே” என்றாள். அழுத்தமாய் நெற்றியில் முத்தும் பதித்தாள். கண்ணீர் பெருகி ஓடியது.
நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு நடந்தாள். உயிரை மகளிடத்தில் விட்டு விட்டு உடம்பை மட்டும் சுமந்து சென்றாள்.

தேவலோகத்தில் மேனகைக்கு ஆரவாரமான வரவேற்பு செய்யப்பட்டிருந்தது. வீதியெங்கும் தோரணம் கட்டியிருந்தனர். இந்திரன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து வரவேற்று பெருமைப்படுத்தினான்.

அரசனே ஆடல் மகளை எழுந்து வந்து வரவேற்பது எத்தனை பெரிய பெருமை? இதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர்.

விஸ்வாமித்திரரின் தவம் கலைத்த மேனகையின் வருகையை கௌரவப்படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவின் முக்கிய அமசமாய் மேனகையின் நாட்டியம் இடம்பெறும் என்று அறிவித்தார்கள்.

மேனகை விஸ்வாமித்திரரின் தவம் கலைக்க பூலோகம் போனதிலிருந்து, காய்ந்து கிடந்த தேவர்களின் கண்கள் எல்லாம் கணவுகளைச் சுமந்தபடி காத்திருந்தன.

மேனகை சபையில் தோன்றினாள் மிடுக்கு நடையும், அந்த ஒற்றைப் பார்வையும் காணாமல் போயிருந்தது.

சபையைத் தாண்டி தூரத்தில் எதையோ தேடியபடி இருந்தது அவள் கண்கள்.

“தேவர்களே… நேற்றுவரை மேனகை என்ற நாட்டியப் பெண் உங்கள் முன் ஆடினாள். இப்போது உங்கள் எதிரில் நிற்பவள் தாய். அழகான பெண் குழந்தையின் தாய். பெற்றெடுத்து பெயர் சூட்டுவதற்கு முன்பே – அவளை அநாதையாக்கிவிட்ட அபலைத்தாய். நீங்கள் விரும்பியபடி ஆட வந்திருக்கிறாள். குழந்தைக்குப் பாலூட்ட வேண்டி மார்பு குலுங்க ஆடப்போகிறாள். தாயைப் பார்த்து மோகம் வளர்க்க விரும்புகிறீர்கள் என்றால்…. தாய்மையைப் பார்த்து காமம் வளர்க்கப் போகிறீர்கள் என்றால்..”

அதற்குமேல் மேனகைக்குப் பேச வரவில்லை. தொண்டை அடைத்தது.

ஆடினாள்.

காலதேவன் மட்டும் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டான்.