சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் கத்திச்சண்டை. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் ’வைகைப்புயல்’ வடிவேலு மற்றும் சூரி நடித்துள்ளனர்.
பல கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டிருக்கும் வாகனத்தை வேகமாக ஓட்டி வருகிறான் வில்லன். காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஜெகபதி பாபு சாகசத்துடன் அதைக் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். இவரின் தங்கையான தமன்னாவை, விஷால் காதலிக்க முனைகிறார். இதற்காக சூரியின் உதவியுடன் ‘மறுஜென்மக் காதல்’ என்று பல பொய்களை அவிழ்த்து விடுகிறார். ஆனால் அவரது உண்மையான நோக்கம், தமன்னாவை காதலிப்பதல்ல, ஜெகபதி பாபு அரசாங்கத்திடமிருந்து மறைத்து, பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடிப்பதே.
விஷால் யார், அவருடைய பின்னணி என்ன, எதற்காக அவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட வேண்டும்? என்பது தான் இப்படத்தின் கதை.
விஷால் வழக்கமான நாயகன்  வேடத்தை வழக்கமான பாணியிலேயே கையாள்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள், காதல் காட்சிகள் மற்றும் வடிவேலு, சூரியின் காமெடி என அனைத்திலும் நன்றாக தான் நடித்திருக்கிறார்.
நாயகன் சொல்லும் பொய்களையெல்லாம் நம்பும் வழக்கமான ‘லூஸூ’ நாயகி தமன்னா.
காவல்துறையாக அதிகாரியாக வரும் ஜெகபதி பாபு, நாயகியைவிட அதிக லூஸாக இருக்கிறார். நாயகனின் பின்னணியை விசாரிப்பதற்காக இவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஒருபக்கம் காமெடி என்றால், அவன் சொல்லும் பொய்யையெல்லாம் நம்பும் இவரை, காவல்துறையின் உயரதிகாரியாக வேறு காண்பிக்கிறார்கள்.
பொய்யான பில்டப் தரும் ரவுடியாக ‘சூரி’. இந்த ‘கைப்புள்ள’ பாத்திரத்தை வைத்து தமிழ் சினிமா இன்னமும் எத்தனை காலத்துக்கு ஜீவிக்குமோ என வியப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. பெண் வேடத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கர்ண கொடூரமாக இருக்கின்றன. சூரியின் நகைச்சுவையில் மிக அரிதாகவே புன்னகைக்க முடிகிறது.
மிகவும் எதிர்பார்த்த வடிவேலுவின் பகுதி, படத்தின் பிற்பாதியில் வருகிறது. ‘நெருப்புடா’ என்கிற அதிரடிப்பாடலின் பின்னணியோடு ‘I am back’ என்று நுழைகிறார் வடிவேலு. ஏறத்தாழ கபாலி ‘ரஜினி’யின் அறிமுகக்காட்சிக்கு நிகரான ஆரவாரத்தை திரையரங்கில் பார்க்க முடிந்தது. அவர்களின் நீண்ட கால ஏக்கம், இதோ தீரப் போகிறது என்கிற மகிழ்ச்சியின் மீது மொத்தமாக தண்ணீர் ஊற்றி ‘நெருப்புடா’வை மொத்தமாக அணைத்து விட்டார்கள்.
இத்திரைப்படத்துக்காக எவரையாவது பாராட்டலாம் என்றால் அது ஒளிப்பதிவாளரையும், சண்டைக்காட்சி வடிவமைப்பாளரையும் எனச் சொல்லலாம்.
இந்த திரைப்படத்துக்குக் ‘கத்தி சண்டை’ என்று ஏன் இயக்குநர் தலைப்பு வைத்தார் என்று எழுகிற கேள்வி வேறு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
‘நான் அப்பவே சொன்னேன்ல.. இந்தப் படத்துக்கு டிக்கெட் புக் பண்ண வேணாமின்னு” என்று படம் பார்த்து வெளியே வந்த பிறகு பார்வையாளர்கள் ஒருவரையொருவர் நோக்கி கத்திச் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்கிற விஷயம் இயக்குநருக்கு முன்பே தெரிந்து விட்டதோ?