(முன்னாள்?) நடிகை கஸ்தூரி பாஜகவில் இணையப்போகிறாரோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது அவரது ட்விட்டுகள்.

நேற்று சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று தலைமைச் செயலகம் எதிரே ராஜாஜி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பிறகு அவர்களை கைது செய்த காவல்துறையினர், பிறகு விடுவித்தனர்.

இந்த நிலையில் ஸ்டாலின் மறியலை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகை கஸ்தூரி. அவர்,  “ரோட்டுல மறியல். “யார் அப்பன் வீட்டு காசு”ன்னு கோஷம். எல்லாம் பழக்கதோசம்.  அடுத்தவாரிசுகள்” என்று எழுதியிருந்தார்.

இதற்கு திமுகவினர் சிலர் கடுமையாக பதில் அளிக்கவே, அடுத்த பதிவில், “முந்தைய எனது ட்விடுக்கு மன்னிக்கவும். அப்பன் வீட்டு காசை பற்றி பேச முழு அருகதை உள்ளவர்களை நையாண்டி செய்தது தப்புத்தான்” என்று மீண்டும் கிண்டலடித்திருந்தார்.

இதையடுத்து கஸ்தூரியை திமுகவினர் பலர் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து,  “போர் போர் அப்படின்னு கேட்டு போரடிக்குது. அக்கப்போர். நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருட கணக்கில் யோசிப்பவர்” என்று கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.

அதே போல மாட்டிறைச்சி விவகாரம் குறித்தும், “மாட்டிறைச்சி சாப்பிட்டதால் நீங்கள் ஒன்றும் ‘ஹீரோ’ இல்லை. முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார் கஸ்தூரி.

ஒருவேளை அம்மணியும்  அரசியலுக்கு வரப்போகிறாரோ?