கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 11

ராக்கப்பன்

அருள் வந்த வேலாயுதம்

 

முதுமையின் வாசலை எட்டித்தொட இருக்கும் ராக்கப்பன், காலஓட்டத்தின் வேகத்தில் தாம் இழந்ததை எண்ணி பார்க்கின்றார். கருந்தமலையில் இருந்து வந்த தமது குடியின் கருந்தமலை தொடர்பு அறுந்துவிடுமோ என்று எண்ணினார். தான் திருமணம் முடிக்காமல், கருப்பரின் குழந்தைகளை ஆளாக்கியதையும் அவர்களை  மணமுடித்து வைத்ததையும் எண்ணி சற்று மனம் ஆறுதலானார். வெளியாத்தூர் குடிபெயர்ந்த சின்னக்கருப்பனும் நல்ல முறையில் வாழ்வதை கேட்டறிந்து சந்தோஷப்பட்டார். எஞ்சியிருக்கும் கிருஷ்ணனையும், வேலாயுதத்தையும் மனம் முடித்து வைத்துவிட்டால் தமது கடமை முடியும் என்று எண்ணினார். எண்ணங்கள் களைவதற்கு முன்னால் தூக்கம் அழைத்துச்சென்றது.

விடிந்ததும், கடந்த இரவின் நினைவுகள் அவரை திருப்பத்தூர் கண்மாய் கரையில் அய்யன் ஆனவர்களை காண கால்கள் அழைத்து சென்றது. ராக்கப்பன், தான் பெறாத பிள்ளைகள் மாண்டதை எண்ணி கண்ணீர் சிந்தினார். தமக்கு பின்னால், தமது சந்ததியினர் எப்படி வாழ்வார்கள் என்று கண் கலங்கினார்.

அன்றைய மாலைப்பொழுதில், பெரிய கருப்பன், பட்டியில் இருந்து வந்த வேளையில், வேலாயுதமும் கிருஷ்ணனும் இரவு காவலுக்கு புறப்பட்டு கொண்டிருந்த அந்தி சாயும் வேளை. வீட்டில், கருப்பாயி சாம்பிராணி புகை போட்டுக்கொண்டிருந்தாள். வேலாயுதம், வீடெல்லாம் புகை என்று முனங்கிகொண்டிருந்தான். சிறிது நேரத்தில், மயங்குவது போன்று தலைசுற்றியவனை பெரியகருப்பனும், கிருஷ்ணனுமாக தாங்கிப்பிடித்தனர். வேலாயுதமோ, அவர்களை திமிறி எகிறிக்குதித்தான். அவன், வீட்டில் இருந்து வெளியே வெட்டவெளிக்கு வந்தான்.

ராக்கப்பனும் ஒன்றும் புரியாமல் வேலாயுதத்தை சாந்தப்படுத்தினார். ஆனால், யாராலும் வேலாயுதத்தை சாந்தப்படுத்த முடியவில்லை. அதற்குள் ஊர்க்கூடியது.

வந்தவர்களில், கோட்டைக்கருப்பர் கோவில் பூசாரி சிங்காரம் பண்டாரம், வந்திருப்பது அருள் என்பதை கண்டறிந்தார். வேலாயுதத்திற்கு விபூதியிட்டு, வந்தவர் யார் என்று கேள்விகேட்டார். வந்தவர் கோட்டை கருப்பராகவும், சங்கிலி கருப்பராகவும், அக்காளாகவும் மாறி மாறி வந்து அருள் வாக்கு தந்தது.

மறுநாள் தான் உதித்த இடமான கருந்தமலை செல்லவேண்டும் என்று உத்தரவிட்டது. மற்றவைகளை, கருந்தமலையில் அருள் கூறுவதாக சொல்லி மலையேறியது. இரவோடு இரவாக, சின்ன கருப்பனுக்கு செய்தி அனுப்பப்பட்டது. பிறந்தமகளான சிகப்பிக்கும், வைரவனுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

விடிந்ததும், வண்டி மாடு கட்டி, அனைவருமாக கருந்தமலை நோக்கி புறப்பட்டனர். ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக கருந்தமலை பயணம் தொடங்கியது. ராக்கப்பனுக்கோ, தன்னோடு கருந்தமலை தொடர்பு அறுந்துவிடும் என்று எண்ணி கலங்கியவருக்கு மிக ஆறுதலாக அந்த பயணம் இருந்தது. வேர்களை நோக்கிய பயணம் வியர்வையில் நனைந்தது.

இரவில் கருந்தமலை எட்டிய கூட்டத்திற்கு, இரவில் காட்டில் வாழும் முறைமையை ராக்கப்பன் இளையோருக்கு கற்றுத்தந்தார். விடிந்ததும், அனைவரும் நீராடி சாம்பிராணி இட்டதும் வேலாயுதத்திற்கு, தன்னால் அருள் வந்தது. கிருஷ்ணன் விபூதி தட்டோடு முன் நின்றான்.

முதலில் கிருஷ்ணனுக்கு மாலை எடுத்து கொடுத்து மனம் முடிப்பதற்கான வேளை வந்ததாக கூறியது. வில்லங்கத்தோடு வரும் பெண்ணை மனம் முடிப்பாய் என்றது. அனைவர்க்கும் பிரமிப்பாய் இருந்தது.

ஆடி மாதம், கருப்பரை நினைத்து படையல் இடவேண்டும் என்றது. அதற்கு முன்னதாக வைரவரையும், திருப்பத்தூர் அய்யனாரையும் வணங்கி, பிறந்த மகளை அழைத்து, ஊரார், உற்றாரை அழைத்து அன்னைவருக்குமாக படையலிட்டு உணவு அளிக்க உத்தரவு இட்டது. சின்ன கருப்பனனுக்கு மகன் பிறப்பதாகவும், சிகப்பிக்கு அடுத்து ஒரு மகள் பிறப்பதாகவும் அருள்வாக்கு கொடுத்தது. ராக்கப்பனை அழைத்து உன் கடமை முடிந்தது புறப்பட தயாராகு என்றது.

ராக்கப்பனுக்கு மட்டுமே கருப்பனின் அருள்வாக்கு புரிந்தது. அனைவருமாக அங்கிருந்து புறப்பட்டு வீடு திரும்பினார்கள். கருப்பனின் அருள்வாக்கு படி படையலுக்கு முந்தய இரவில் அக்காள் படையல் இட்டு ஆடவர் மட்டுமாக விளக்கு வெளிச்சம்  இன்றி அடுத்தவர் பார்வையில் படாமல் வழிபட்டனர். விடிந்ததும் மிக சிறப்பாக கோட்டை கருப்பருக்கும், சங்கிலிக் கருப்பருக்கும் படையல் இட்டு பிறந்த மகளுக்கும் அவர் பிள்ளைக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டனர். உற்றார், உறவினர் மற்றும் ஊராரை அழைத்து தங்கள் வழிபாட்டில் கலக்க செய்தனர்.

ராக்கப்பனுக்கோ பரம திருப்தி. தமக்கு பின்னாலும், தமது குடியினர் அமைப்பாக கூடிவாழ்வதற்கும், பிறந்த மக்கள் சொந்தம் தொடர்வதற்கும் தங்கள் குலதெய்வ வழிபாடு பேருதவியாய் இருக்கும் அது தங்கள் குடி காக்கும் என்று நம்பினார். அந்த நம்பிக்கையுடன் அன்றைய பொழுது கலைந்தது. வேலாயுதம் சாமியாடியாகவும், கிருஷ்ணன் பூசாரியாகவுமாக முற்றிலும் மாறினர்.

கிருஷ்ணன், வாலிப முறுக்கில் திரிந்துவந்தான். அவன் மந்தையோடு போனால் வம்போடு திரும்புவான். அவன் மாடு பிடிப்பதிலும் வல்லவன். சுற்றுவட்டார மாடுகளை அடக்கி வம்புகளை வாசல்வரை வரச்செய்தான். அப்படி ஒருபொழுதில், சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மந்தையோடு சென்றவன், வெயிலின் தாக்கத்தால் நாவறள, அருகில் இருந்த குடிசையை நோக்கி தண்ணீர் கேட்டு போனான். குடிசையில் இருந்து அரவம் கேட்டு வெளியே வந்த ஆதாமை, கிருஷ்ணனை கண்டு பிரமித்து நின்றாள். ஏனெனில், கிருஷ்ணனை பலமுறை மாடு அடக்கும் போட்டிகளில் பார்த்திருக்கிறாள். தனது செவத்த காளையையும் அடக்கியவன் கிருஷ்ணன் ஆயிற்றே.  ஆனால், கிருஷ்ணனுக்கு ஆதாமையை அறிந்திருக்கவில்லை.

தண்ணீர்கேட்டு போன கிருஷ்ணனுக்கு மோர் கொடுத்தாள். சற்று இளைப்பாற சொல்லி, உப்பு கண்டம் சுட்டு, நீர் மோர் கூழ்  கொடுத்தால். இதற்கு முன்னதாக கூழ் மற்றும் உப்புக்கண்டம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த சுவை ஏதோ கிருஷ்ணனுக்கு புதிதாக இருந்தது. அன்போடு பரிமாறும் உணவு சுவைக்கத்தானே செய்யும்.

கூழும், உப்புக்கண்டமும், கிருஷ்ணனை தினமும் சுண்ணாம்பு கால்வாய் குடியிருப்புக்கு மந்தை பத்த சொல்லியது. தினமும் கூழும் உப்புக்கண்டமும் அன்போடு பரிமாறப்பட்டது. அப்போதுதான், ஆதாமை, தம்மை வெகுநாட்களாக அறிந்ததை அறிந்தான் கிருஷ்ணன். அது ஒரு மந்தையில் பூக்கும் காதலாக பட்டது கிருஷ்ணனுக்கு.

கிருஷ்ணன், ஆதாமையை மணமுடிக்க விரும்புவதாக சொல்ல, அப்போதுதான், ஆதாமைக்கு ஏற்கனவே தனது மாமானுடன் நிச்சயம் ஆகியிருப்பதை அறிந்தான். ஆதாமைக்கும் கிருஷ்ணனை பிடித்தே இருந்தது. கிருஷ்ணன் தொடர்ந்து வற்புறுத்தி அன்றே மந்தையோடு ஆதாமையையும் அழைத்துவருவதாக முடிவெடுத்தான் கிருஷ்ணன்.

வழக்கத்தை விட சற்று முன்னதாகவே மந்தையை ஊர் நோக்கி கிளப்பிய கிருஷ்ணன், கட்டிய சேலையுடன் ஆதாமையை அழைத்துவந்தான். வீடு எட்டிய கிருஷ்ணனுக்கோ, வீட்டில் சித்தப்பன் ராக்கப்பன் இல்லை என்பது பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நேரம், சுண்ணாம்பு கால்வாய் குடியிருப்பு முழுக்க தெரிந்திருக்கும், ஆதாமை காணவில்லை என்று. தன்னோடு தான் வந்திருப்பாள் என்பதை அவர்கள் யூகிப்பது ஒன்றும் பெரிய ஆச்சர்யமாக இருக்காது. ஊரோடு வரும் அவர்களை பெரிய ஆம்பளை இல்லாமல் எப்படி எதிர் கொள்வது என்று சற்று தடுமாறினான் கிருஷ்ணன்.

அழகியோ, தன் வீடு வந்த பெண்ணை தன் மகன் கரம் பிடித்தே ஆகவேண்டும்  என்று தீர்க்கமாக முடிவெடுத்தாள். அழகி, கருப்பாயி, வேலாயுதம், கிருஷ்ணன், ஆதாமை அவர்களோடு அவர்களது குழந்தைகள் நால்வரையும் அழைத்து கொண்டு திருப்பத்தூர் கண்மாய் நோக்கி போக சொன்னாள். மேலும், பட்டு துண்டுகள் இருக்கும் பானை இரண்டையும் எடுத்துக்கொண்டு கிழவி அழகி முன்செல்ல, நடையும் ஓட்டமுமாக கண்மாய்கரையை நோக்கி ஓடினார்கள். சுண்ணாம்பு கால்வாயில் இருந்து வருபவர்கள் கண்மாயை கடந்துதான் வரவேண்டும். அவர்கள், கரையைக்கடந்து வருவதற்கு முன்னதாக தமது கரையை அடையவேண்டும் என்று விரட்டினால் அழகி. கிழவிக்கு இந்த ஓட்டமும் அழுத்தமும் ஆகாது என்று முனங்கினாள் சிகப்பி.

பொழுது சாய்ந்த வேளை அது. பானையில் இருந்த பட்டு துண்டுகளை எடுத்து, வேலாயுதம் மற்றும் கிருஷ்ணனை கொண்டு கண்மாய்கரையில் இருந்த பனை மரங்களில் ஆளுயரத்தில் தலைப்பாகை போல் கட்ட செய்தாள்.  தலைப்பாகைகள் கட்டியவுடன், பெரியவர்கள் அனைவரும் அதை போன்றே பட்டு தலைப்பாகை கட்ட செய்தால். பிறகு, அனைவர்க்கும் தீவிட்டி தந்தாள். குழந்தைகளுக்கு சற்று பெரிய தீவெட்டி தந்தாள்.

மறுகரையில் இருந்து பார்ப்போருக்கு கரையெங்கும் தலைகளாக தெரிந்தது. பட்டு துண்டுகள், காரிருளில் தீவெட்டி வெளிச்சத்தில் மின்னியது. அழகி எதிர்பார்த்ததை போன்றே, சுண்ணாம்பு கால்வாய் குடியிருப்போரும் கூட்டமாக மறுகரை வர, திருப்பத்தூர் கரையில் இத்தனை பெரிய கூட்டமா என்று தயங்கி நின்றனர். திருப்பத்தூரோடு ஊர்ப்பகையாக முடிந்தால் அது பல விபரீதங்களை உருவாக்கும் என்று எண்ணிய சுண்ணாம்பு கால்வாய் குடியிருப்பு மக்கள் மறுநாள் காலையில் இதை பேசிக்கொள்ளலாம் என்று ஊர் திரும்பினர்.

கிழவி அழகியின் அறிவு கூர்மை அன்று ஒரு கருப்பர் குடி காத்தது . கிரிஷ்ணனும், வேலாயுதமும் பிரமிப்பாக  தமது ஆத்தாளை பார்த்தார்கள். அன்றைய இரவே, கிருஷ்ணன் ஆதாமை திருப்பூட்டு கிழவியின் ஆசீர்வாதத்தில் முடிந்தது.

வாழ்கை சக்கரம் சுழலும்.