சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 5வது  நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நரடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

கருணாநிதியின் நினைவு தினம் இன்று திமுகவினரால்  மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னையில்,  முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில், துரைமுருகன், பொன்முடி, ஏ.வ வேலு, கே.என். நேரு உள்பல அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என  ஆயிரக்கணகானோர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.

பேரணி மெரினாவை அடைந்ததும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.