நாளை கர்நாடக அமைச்சரவை  பதவி ஏற்கலாம் : முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

Must read

பெங்களூரு

நாளை கர்நாடகாவில் அமைச்சரவை  பதவி ஏற்பு நடைபெறலாம் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் முதல்வராகப் பதவி வகித்த எடியூரப்பா ராஜினாமா செய்தார்.  கடந்த 28 ஆம் தேதி அம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுள்ளார்.   இதையொட்டி துணை முதல்வர், அமைச்சர் பதவிகளுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.   இதில் காங்கிரஸில் இருந்து கட்சி மாறிய 17 பேரும் அமைச்சர் பதவிக்குக் குறி வைத்துள்ளனர்.

அமைச்சரவை அமைப்பதில் இழுபறி நிலவுவதால் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று டில்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டா, பொதுச் செயலர் சந்தோஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.  அதன் பிறகு மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதன் பிறகு பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பதில் இழுபறியோ, காலதாமதமோ ஏற்படவில்லை. அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேலிடத் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் வேகமாக நடந்து வருகிறது.அமைச்சரவையில் சாதி பிரதிநிதித்துவம், மாகாணத்துக்கான பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இடம் அளிக்கப்படும்.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் எல்லாம் இறுதி செய்யப்படும்.  எல்லா நடவடிக்கைகளும் எதிர்பார்த்தவாறு சுமுகமாக முடிந்தால், ஆகஸ்ட்4-ம் தேதி (நாளை) அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும்”என அறிவித்துள்ளார்.

 

More articles

Latest article