கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் கூறியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

“வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிக்கு எதிராக கர்நாடகத்தைச் சேர்ந்த மேத்யூ தாமஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே, 32 கோடி ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டன.

இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானதும், மேலும் 54.5 கோடி ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி நடைபெறும். மூன்று மாதங்களில் 32 கோடி ஆதார் அட்டைகள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைந்ததால், அந்த அனுபவத்தில் 54.5 கோடி ஆதார் எண்களையும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்போம்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சிதைக்க முடியும் என்று யாரேனும்   ஆதாரங்களுடன் புகார்களை அளித்தால்,   ஆராய்ந்து தகுந்த தீர்வுகளைக் காண்போம்.

வாக்குகளை வாக்குச்சாவடி வாரியாக எண்ணுவதற்காக 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகளை ஒன்றாக எண்ணக்கூடிய கூட்டல் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருக்கிறது.  தற்போதைக்கு இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த இயலாது. இதை பயன்படுத்த வேண்டுமானால், தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் கருத்தை உச்ச நீதிமன்றம் மார்ச் 6-ஆம் தேதி கேட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை நடுநிலையாகவும், நேர்மையாகவும், நம்பகத் தன்மையுடனும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கர்நாடக வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்.20-ஆம் தேதி வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக் காட்டினால், தேர்தல் ஆணையம் திருத்தும். வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி ஏப்.15-ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று நான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல் தவறு.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். ஊடகங்கள் முன்னிலையில் அந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதால், அது வரை அனைவரும் காத்திருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.