சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து நாசா உள்ளிட்ட உலகின் முக்கிய அமைப்புகளும் தலைவர்களும் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து செயல்படுத்தப்பட்ட இந்த இறுதி கட்ட பணிகளை பலரும் நேரலையில் கண்டு மகிழ்ந்ததுடன் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய அடுத்த நொடி நேரலையை விட்டு வந்து உற்சாகமாக கொண்டாடினர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக வாழ்த்தினார்.

கர்நாடக அரசு சார்பில் துணை முதல்வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் நேரில் சென்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் துணை இயக்குனர் கல்பனா உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொடங்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து அளித்துவந்த ஊக்கத்தின் காரணமாக இந்தியா இன்று நிலவை எட்டிப்பிடித்துள்ளது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையைச் செய்துள்ளது.