பெங்களூரு

சாலை விரிவாகத்துக்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்னும் 107 வயது மூதாட்டியின் கோரிக்கையை கர்நாடக முதல்வர் குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சாலுமரதா திம்மக்கா என்பவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார். இவருக்கு திருமணமாகி வெகு நாட்களாகியும் மக்கள் பேறு இல்லை. இதனால் இவரும் இவர் கணவரும் தங்களின் பெயரை சொல்ல மரங்களை நட திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் தொடர்ந்து மரங்களை நட்டு வந்தனர். அதுவரை திம்மக்கா என அழைக்கப்பட்ட அவர் சாலுமரதா திம்மக்கா என அழைக்க்ப்பட்டார்.

கன்னட மொழியில் சாலுமரதா என்றால் மரத்தோப்பு என பொருள் ஆகும். இவருடைய பணியை பாராட்டி இவருக்கு கர்நாடக மாநில விருதுகள், பல பல்கலைக்கழக விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆம் வருடம் பிபிசி யால் அறிவிக்கப்பட்ட 100 புகழ்பெற்ற சர்வதேச பெண்மணிகள் பட்டியலில் திம்மக்கா இடம் பெற்றுள்ளார்.

இவர் கர்நாடகாவில் அமைந்துள்ள குடூர் – ஹுடிக்கல் நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 1960 களில் 385 ஆலமரங்களை நட்டுள்ளார்.   நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக இந்த மரங்களை வெட்ட தீர்மானிக்கப்பட்டது. தற்போது 107 வயதாகும் திம்மக்காவை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை ஒட்டி அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் துணை முதல்வர் பரமேஸ்வரையாவையும் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு முன்பு தாம் நட்ட இந்த மரங்களை வெட்ட அனுமதிக்க போவதில்லை எனவும் சாலை விரிவாக்கத்தை கைவிட முதல்வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் திம்மக்கா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரது கோரிக்கைகளை குமாரசாமி மற்றும் பரமேஸ்வரையா இருவரும் கேட்டறிந்தனர். அப்போது திம்மக்கா மரங்களை வெட்ட வேண்டாம் என்னும் தனது கோரிக்கைக்கு முதல்வரை சம்மதிக்க வைத்துள்ளார்.

அதை ஒட்டி முதல்வர் குமாரசாமி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அந்த சாலை விரிவாக்க பணியை நிறுத்தி உள்ளார். மரங்களை வெட்டாமல் பணிகளை நடத்த மாற்று வழி காணவேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு முதல்வர் மற்றும்துணை முதல்வர் ஆகிய இருவரும் கலந்து பேசிய பிறகு எடுத்துள்ளதாக துணை முதல்வர் கூறி உள்ளார்.