சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல பாமக நிறுவனம், பாமக தலைவரும் டிவிட் செய்துள்ளனர்.

காமராஜரின் 121வது பிறந்தநாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. காமராஜர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செய்தார். அதுபோல அமைச்சர்களும் காமராஜர் சிலைக்கு மரியாதை செய்தனர்.

இந்த நிலையில்,மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி டிவிட்பதிவிட்டுள்ளார். அதில்,

எளிமை, நேர்மை இவையே தனது கொள்கையென கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்ந்த கர்ம வீரர், கல்விக் கண் திறந்த தர்ம சீலர், மக்கள் மனதில் என்றும் நீங்கா புகழ் கொண்ட போற்றுதலுக்குரிய அய்யா திரு.காமராஜர் அவர்களின் 121 ஆவது பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்கி, சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன் என பதிவிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, தரமான கல்வி காமராசரின் பிறந்தநாளில் உறுதியேற்போம்; அவரது பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்! தமிழ்நாட்டில் அரசியல், சமூக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த கர்மவீரர் காமராசருக்கு இன்று 121ஆம் பிறந்தநாள். ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசக் கல்வி, குலக்கல்வி என்ற முறையில் பறிக்கப்பட்ட நிலையில், புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர். கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகிய துறைகளிலும் எண்ணிலடங்காத திட்டங்களை செயல்படுத்திய விருதுப்பட்டி வீரர் அவர். அவரது பெருமைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்காக அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்கும் நிலையை உருவாக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டில், கல்வி மற்றும் தொழிற்புரட்சியின் கதாநாயகன் காமராசரின் 121-ஆம் பிறந்தநாளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்க உறுதியேற்போம்! கல்வியிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராசருக்கு இன்று 121ஆம் பிறந்தநாள். தமிழ்நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம். தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்! என கூறியுள்ளார்.

உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…