வாஷிங்டன்:

என்னை வித்தியாசமானவன் என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன் என நடிகர் கமல் அமெரிக்க ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

தீவிர அரசியலில்   குதித்துள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்நிலையில் அமெரிக்கா சென்றிருந்த அவர்,  ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்தார்.

 

அந்நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது;

“2018-ம் ஆண்டு அரசியல் பயணத்தை துவக்கும் நான் கிராமங்களில் இருந்து மாற்றத்தை துவங்க இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கு அனைவரின் பங்களிப்பை நான் எதிர்பார்க்கிறேன்.

 

மாவட்டத்துக்கு ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அதை முன்மாதிரி ஊராக மாற்ற திட்டமிட்டுள்ளேன்.

 

திட்டங்களை அமல்படுத்துவதில் குறைகள் இருக்கின்றன. இதுவே மாநில அரசி்ன் நிதிச்சுமைக்கு காரணமாக இருக்கிறது.

 

ஓட்டுக்கு பணம் வாங்கினால் நமது பாக்கெட்டில் இருந்து அரசியல்வாதிகள் பணத்தை எடுக்கும் போது நாம் கேள்வி கேட்க இயலாது.

பெரியார், காந்தி ஆகியோர் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் இவர்கள் மக்களுக்காக போராடினார்கள்.   தேர்தல் அரசியலை தாண்டி பெரியார்,காந்தி ஆகியோர்தான் எனது ஹீரோக்கள்.

நான் என்னை வித்தியாசமானவன் என்று கூறிக்கொள்ளவில்லை. ஆனால் அரசியலில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன்.

எனது நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். அதே போல ரஜினியின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான்” என்று கமல் பேசினார்.