சென்னை

சிகரெட் பழக்கத்தால் நுரையீரல் பாதித்து மருத்துவமனையில் அனுமதி: எழுத்தாளர் பாலகுமாரன் சொல்லும் அறிவுரை

“தினமும் 120 சிகரெட்டுகள் புகைத்த காரணத்தால் ஐம்பது வயதில் அப்பழக்கம் கைவிட்டும் நூலையீரல் செயல் திறன் பாதிக்கப் பட்டது” என்றும், அதனால் தற்போது மருத்தவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (வயது 72)  நுரையீரல் பிரச்சினையால் சென்னை காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனது உடல் நிலை குறித்து கடந்த 9ம் தேதி முகநூல் பக்கத்தில், “ஒரு நாளைக்கு 120 சிகரெட்டுகள் இழுத்த காரணத்தால் ஐம்பது வயதில் அப்பழக்கம் கைவிட்டும் நூலையீரல் செயல் திறன் பாதிக்கப் பட்டது. அதாவது 25 சதவிகிதம் தான் வேலை செய்யும். அதிகம் ஆட, ஓட தாவ முடியாது. ஒரு மாதிரி இளமையில் முதுமை.
முதுமை வர இந்நிலை மோசமாகும் நுரையீரல் மேலும் திறன் இழக்கும் இதற்கு COPD என்று பெயர் Chronic obstructive pulmonary diseases
நெபுலைசர் என்கிற மருந்துப் புகையை தினமும் உபயோகப்படுத்த வேண்டும். தினமும் Co2 எனகிற ஆக்ஸிசனும் ஏற்கவேண்டும். குளிர் காலம் எதிரி” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “மூச்சிரைப்பின் உச்சத்தில் குத்திருமல். இதுதான் பலி கேட்கிறது. இருமலும் திணறலும். நடுவே நான் மத்தளம்.தூக்கமில்லா இரவு. குறைவான உணவு. நரம்பினுடே மருந்து. உடல் சூடு. கை கால் வலி.” என்றும் பதிவிட்டிருந்நதார்.

இந்த நிலையில் அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உடல் நிலை முடியாத நிலையிலும்கூட, சிகரெட் பழக்கத்துக்கு எதிராக அவர் பதிவிட்டிருப்பது நெகிழவைக்கிறது.

விரைவில் அவர் குணமாகி இல்லம் திரும்ப வாழ்த்துவோம்.