சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டதுடன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை யடுத்து, அவர் கடந்த 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட‘ கூட்டணி கட்சி தலைவர்களான  வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்றும்  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரினார்.

இதையடுத்து, மற்ற கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவு தருவாக அறிவித்துள்ளதுடன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து   ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.இன்று   மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில்  நடைபெற்றது. இதில், இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.