சென்னை: நாளை குடியரசு தின விழாவையொட்டி, நாளை மாளிகை கிண்டி ராஜ்பவனில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்து உள்ளார். ஏற்கனவே விசிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

குடியரசு தினத்தன்று (நாளை) மாலை 4:30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல்  தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக நாளை ஆலோசித்து முடிவெடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அதே சமயம், ஆளுநரின் தேநீர் விருந்தே புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கூறிய திருமாவளவன்,  : குடியரசு நாளில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மேதகு ஆளுநர் அவர்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம். அதேவேளையில், அவ்விருந்தில் பங்கேற்பதைத் தவிர்ப்பது என முடிவு செய்திருக்கிறோம்! அத்துடன், தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்! ஆளுநர் என்கிற முறையில் தனது பொறுப்பையுணர்ந்து அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுகிறாரா என்பதும் கேள்விக்குறியாகவுள்ளது. அவருடைய செயல்பாடுகள் பெரும்பாலும் வெளிப்படையாகவே அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானவையாக இருக்கின்றன. ஆளுநரின் இத்தகைய போக்கைக் கண்டித்து அவரது அழைப்பைப் புறக்கணிப்பது என விடுதலை  சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டும் தற்போதைய ஆளுநர் அவர்களை இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்; தமிழ்நாடு அரசுக்கு இணக்கமான வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை மேலும் சில திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கும் என தெரிகிறது. ஆனால், திமுக கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.