சென்னை:

மிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதமாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்ட மன்றத்தில் அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தின் புத்தாண்டு கூட்டத்தொடர் கடந்த 2ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கருத்தை பதிவு செய்தனர். மேலும் கேள்வி நேரத்தின்போது பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உரையாற்றி வருகிறார். அப்போது பல்வேறுஅறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அமைக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி பகுதி கடலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் தென்னாற்காடு, வடஆற்காடு,திருவண்ணாமலை மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது, கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மலைவாழ் மக்களின் தரம் உயரவும், விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், நிர்வாக வசதிக்காகவும் தற்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அமைக்கப் படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்  தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகிறது.