சென்னை:

மிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி,   உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்தார். அது நிறைவேற்றப்பட்ட நிலையில் உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை கோவை உட்பட 12 மாநகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றி யங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1.30 லட்சத்துக்கும் அதிகமான பதவிகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு  அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிந்தது.

இப்பதவிகளுக்கு புதியவர் களை தேர்வு செய்ய, தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வார்டுகள் மறு வரையறை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக உள்ளாட்சிகளை நிர்வகிக்கும் வகையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களது பதவிக்காலம் ஏற்கனவே 5 முறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31ந்தேதியுடன் முடிவடைந்ததால், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் வகையில் திருத்த மசோதா இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பான வழக்கில், மே மாதம் இறுதியில்தான் உள்ளாட்சி தேர்தல் குறித்து  அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதை மெய்ப்பிக்கும் விதமாகவே மேலும் 6 மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 6வது முறையாக உள்ளாட்சி அதிகாரிகளின் பதவிக்கு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறை நீட்டிப்பு!