கலைஞரின் பேனா! கவிஞர் ராஜ்குமார் மாதவன்

Must read

கலைஞரின் பேனா

கவிதை:  ராஜ்குமார் மாதவன்

சான்றோரின் சொல்லும்,

சிந்தனையாளனின் எழுத்தும்,

சிறந்த ஆளுமையின் செயலும்,

ஒரு சிறந்த சமூகத்தை நிர்மாணிக்கும்,

தலைவா, நீயே அதற்கு சாட்சி.

 

காந்தியின் கண்ணாடியும்,

பெரியாரின் தடியும்,

அம்பேத்கரின் புத்தகமும்,

அறிஞர் அண்ணாவின் ஒற்றை விரலும்,

கலைஞரின் பேனாவும்,

சரித்திரத்தின் அழியா குறியீடுகள்.

 

நிழல் கூட,

பிரிந்திருக்கலாம் – ஆனால் ,

இதயத்துடிப்பு இருந்தவரை

உன்னோடு பயணித்த

உன் பதினோராம் விரல்,

பேனா, உன்புகழ் பேசுகிறேன்.

 

என்னை  திறந்து

வாழ்க்கை பயணத்தை

தொடங்கினாய்.

 

கையெழுத்து பிரதி

துவங்கியபோது,

நானும் தாளும் தானே  மூலதனம்.

 

திரவிய தேடலில்,

உருண்டோடிய தடங்கள் நான் அறிவேன்,

இருபது வயதில்,

குரு (ஜுபிடர்) பார்வையில்,

ராஜகுமாரியில் தொடங்கிய பயணம்,

அபிமன்யு, மருதநாட்டு இளவரசி,

மந்திரிகுமாரி என்று போய்,

பராசக்தியில் உச்சம் தொட்டது.

திரையுலக வசனங்களின்,

போக்கையே திசை மாற்றிய

திரையுலக மாலுமி நீ.

 

உன் சிந்தையால்,

நான் சிந்திய மையில்

நட்சத்திர கதாநாயகர்கள்

விதவிதமாய் உருவானார்கள்,

சிவாஜியும் எம்ஜியாரும்,

உன் எழுத்தின்

நட்சத்திர விருதுகள் தானே.

 

ராமானுஜர் எழுதுகையில்,

நானே வைதீகனானேன்,

பொன்னர் சங்கர் எழுதியபோது

வரலாறு கண்ணில் நின்றது,

உன் திருக்குறளின் உரை,

திருக்குறளை குன்றின்

மீது  ஏற்றிய விளக்காக்கியது.

 

நீ “உடன்பிறப்பே”

என்று  எழுதியபோதெல்லாம்,

மையே உதிரமாகி,

எழுத்துக்கள் உயிர்பெற்றது.

 

சிலர் கையெழுத்துதான்

பலர் தலையெழுத்தை மாற்றும்,

உன் கையெழுத்தோ,

ஒரு இனத்தின் போக்கையே மாற்றியது.

 

பலசமயங்களில்

என் மை வற்றியதுண்டு,

ஆனால், உன் மெய்யில்

சிந்தனை என்றும் வற்றியதில்லை.

 

ஓய்வறியா சூரியனே,

என்னை ஒயவிடாமல் சுழற்றியவனே,

எனக்கு ஓய்வு கொடுக்கவா,

நீ ஓய்வு பெற்றாய்.

இந்தா உன் உடன்பிறப்புகள்

கூடி பெருகி,

வங்கக்கடலோரம்,

வான்முட்ட என் சிலை

வடிக்கிறார்கள்.

 

உன் நெஞ்சில் இருந்த நான்,

உன்னை அண்ணாந்து பார்ப்பதாக,

என் முள்முனை வான்பார்த்து

நிற்கப்போகின்றேன், நின் சமூகம் போல.

நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்

 

More articles

Latest article