நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்! கவிஞர் ஹிம்ரோஸ்

Must read

நான் கலைஞரின் பேனா பேசுகிறேன்!!

உன்
மனசாட்சி நான்!
நீ ஆண்டது
மனுவின் ஆட்சி அல்ல
மனிதற்கான ஆட்சி
என்பதற்கு நானே சாட்சி!!

மனசாட்சி கூட உறங்கிவிடும்..
நீ உறங்கும் வரை
நான் உறங்கியதே இல்லை!

“உடன் பிறப்பே”
என்று நீ எழுதிய போது
என் மெய் சிலிர்த்தது!!
நானும் உன் உடன் பிறப்பாக
உணர்ந்த நாள் அல்லவா அது!!

லட்சக்ணக்கான
தொண்டர்களை கட்டிபோட்ட
அந்த மந்திர வார்த்தைகளுக்கு
சொந்தக்காரன் நீ!!

வள்ளுவனுக்கு எழுதுகோல்..
வீர சிவாஜிக்கு வாள்..
கண்ணகிக்கு காற்ச் சிலம்பு..
காந்திக்கு மூக்குக்
கண்ணாடி..
பெரியாருக்கு கைத்தடி..
அண்ணாவுக்கு மேல்துண்டு..
கலைஞருக்கு பேனா!!

உன்னால் எனக்கு
அடையாளம்…
நீ கை தொட்டு உயிர் பெற்ற
அகலிகை நான்!!

என் முனை கூட மழுங்கியது உண்டு..
உன் மூளை என்றும் மழுங்கியதே இல்லை.
என் மை கூட தீர்ந்து போனதுண்டு..
உன் சிந்தனைகள் தீர்ந்து
போனதே இல்லை!!

தமிழே
அமுதே
மொழியே
உயிரே
உடன் பிறப்பே..
என்றெல்லாம் நீ எழுதும்
போது உன் கை வேகதிற்க்கு
ஈடு கொடுக்க முடியாமல்
என் கால்கள் நோகும்!!

நீ கவிதை எழுதும் போது..
நான் காதல் கொள்வேன்!!
சிலம்புக்கு உரை எழுதும்போது
நான் கற்பு கொள்வேன்!!
ரோமாபுரி பாண்டியன்
கதை எழுதும் போது
வீரம் கொள்வேன்!!
திருக்குறளை ஆயும் போது
நீதி கொள்வேன்!!
நீ ராமானுஜரை தொடும் போது
நான் சமத்துவம் கொள்வேன்!!

வான் புகழ்
வள்ளுவனுக்கு
நீ அமைத்த சிலை
133 அடி;
உன் புகழ் பாடும்
என் சிலைக்கு
134 அடி;
உன்னால் எனக்கு
பெருமை..
உலகம் சொல்லும்
உன் பெருமை!!

கடல் நடுவே..
உதய சூரியன்
உதயம் ஆகும் போதெல்லாம்
உன்னை நினைத்து
நான் கண்ணீர் சிந்துவேன்…

என் கண்ணீர்(மை)
கரைந்து
இந்த கடல் நீரும்
நீலம் ஆகட்டும்!!

இப்படிக்கு,
கலைஞரின் பேனா…. கவிஞர் ஹிம்ரோஸ்

More articles

Latest article