சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் சென்னையில் வலம் வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி ஜோதி தொடா் ஓட்டம் பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த (ஜூலை) 19ந்தேதி  தொடக்கி வைக்கப்பட்டது.  இந்த ஜோதியான  75 முக்கிய நகரங்களைக் கடந்து  இன்று காலை மாமல்லபுரம் வந்தடைந்தது, சிவ.வீ.மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் முன்னிலையில், மேகதாளத்துடன் கலை நிகழ்ச்சிகளுடன்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜோதியை அமைச்சர் மெய்யநாதன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, இன்று மாலை சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. மாநில கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கு வரை ஜோதி ஓட்டம் நடைபெறவிருக்கிறது. காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவேரா சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் ஒரு சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். இதன் தொடக்க விழா நாளை (28ந்தேதி பிற்பகல்) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில், செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.