விழுப்புரம்:
 
வியட்நாமில் நடைபெற்ற பீச் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீராங்கனை, அடுத்து நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
0
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவிந்தியம் அருகே உள்ள சோழபாண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து. ஏழ்மையில் வாடும் இவரது மகள், அந்தோணியம்மாள். மதுரை யாதவர் கல்லூரியில், முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அந்தோணியம்மாள் கபடி வீராங்கனை. சமீபத்தில் வியாட்நாமில் நடந்த சர்வதேச பீச் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர்.
அடுத்து நடைபெற இருக்கும் மகளிருக்கான உலகக்கோப்பை கபடி போட்டியில் பங்கேற்று இந்திய அணிக்காக தங்கம் வெல்வதே லட்சியம் என்று கூறும் அந்தோணியம்மாள்,  இப்போட்டியில் பங்கேற்க தனது பொருளாதார சூழல் இடம் கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார்.
“பீச் கபடி போட்டிகளில் தங்கம் வென்ற போதிலும், அரசு உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் கூறுகிறார்கள் அந்தோணியம்மாளின் பெற்றோர்.
இந்திய அணியில் பங்கேற்று உலக போட்டியில் தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும் என்கிற அந்தோணியம்மாளுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்பதே அனைவரும் விருப்பம்.
அந்தோணியம்மாளின் விருப்பம் நிறைவேறுமா?