கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு,  வடலூர் சத்தியஞான சபையில்  ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதை பல நூறு பேர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

வாடிய பயிர்கள் எல்லாம் கண்டபோது வாடினேன் என கூறிய வள்ளலார் வாழ்ந்து வந்த வடலூரில்  அமைந்துள்ள சத்திய ஞான சபையில், 153 வது தைப்பூச ஜோதி தரிசன விழா  இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று  காலை 6மணி,  10 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி நாளை காலை 5:30 மணி என 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

முன்னதாக  தைப்பூச விழாவையொட்டி  சத்திய ஞான சபையில்,  நேற்று அதிகாலை  5 மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. அன்றைய  இரவு தரும சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து  இன்று  சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் “அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி” என்று முழங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இரவு முதல் குவிந்து தரிசனத்தை கண்டு களித்து வருகின்றனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஞானசபை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.