சென்னை:

ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி  வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை திடீரென வழக்கு தொடர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. விசாரணை ஆணையத்தில் ஏற்கனவே விசாரணை முடிவுபெறும் நிலையில் அப்போலோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்போலோவில் சுமார் 75 நாட்களாக சிகிச்சை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நலமுடன் இருக்கிறார் என்று அப்போலோமருத்துவமனை வட்டாரம்  கூறி வந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை ஏற்படுத்தியது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஏற்கனவே அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்து விட்டது. துணை முரதல்வர் ஓபிஎஸ் மட்டுமே விசாரணைக்கு ஆஜராக வேண்டியது இருக்கிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போத, ஆணையம் உத்தரவிட்டும் சில அப்போலோ மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில்,  விசாரணை ஆணை  நீதிபதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  எச்சரிக்கை விடுத்த நிலையில்,  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து அப்போலோ நிர்வாகம் மற்றும் மருத்துவர்களிடம் ஆணையம்  கிடுக்கி பிடி கேள்விகளை எழுப்பியது. ஆனால், மருத்துவர்கள் விசாரணைக்கு  ஆஜராகாத நிலையில், அவர்கள் ஆஜராக மாட்டார்கள் எனவும், உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்,  ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017 ம் ஆண்டு தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை முடிவடைய உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அப்போலோ நிர்வாகம் உயர்நீதி மன்ற்ததில் வழக்கு தொடர்ந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் சசிகலாவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.