சென்னை:

திமுக, பாஜகவின் எதிர்க்கட்சியினரை முடக்கும் வகையில், பழைய வீடியோக்கள் மற்றும் போலி தகவல்களை கொண்டு தேர்தல் ஆணையத்தில் போலியான  புகார்கள் கொடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் போட்டியிடும்  கனிமொழி மீதான பொய்ப்புகாரை, செய்தியாளர்கள் அது பழைய வீடியோ என்று அம்பலப்படுத்தினார்கள். இதன் காரணமாக புகார் கொடுத்த அதிமுக நிர்வாகியின் முகம் அஷ்டகோணலாக மாறி வெளியேறினார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நேற்று தலைமை செயலகம் வந்த அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை,  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவிடம் கனிமொழி மீதான புகார் ஒன்றை கூறினார். அதற்கு ஆதாரமாக வீடியோவை தாக்கல் செய்தார்.

அந்த வீடியோவில்,  தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பணத்தை வாரி இறைக்கிறார் என்று கனிமொழி மீது குற்றம் சாட்டி, நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

புகார் அளித்த பின்னர் வெளியே வந்த இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் ஆணையத்தில் அவர் கொடுத்த வீடியோ பதிவை செய்தியாளர்களிடமும் காண்பித்தார்.

ஆனால், செய்தியாளர்களை அவரை மடக்கி, இந்த வீடியோ ஏற்கனவே கிராமசபை நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்டது… இது ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி, அனைவரும் பார்த்த தாயிற்றே என்று அம்பலப்படுத்தினார்.

இதனால் செய்வதறியாது திகைத்த இன்பதுரை, செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப்பானார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல ஏராளமான பொய்  புகார்கள் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மீது ஆளுங்கட்சியும், ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து வருகின்றன.

சமீபத்தில், முன்னாள் திமுக நிர்வாகி மு.க.அழகிரி- பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக ஒரு புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல  மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முகநூல் பதிவு போன்று  மதுரை சித்திரைத் திருவிழா நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன என்ற பதிவை வைத்து சிலர் கொந்தளித்தனர்..

இதுபோன்ற போலியான புகார்கள் ஏராளமான தேர்தல் ஆணையத்தில் குவிவதால், எந்த புகார் உண்மையானது என்று கண்டறிவதில் தாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.