நாடறிந்த தலைவர்கள் சொந்த மண்ணில் இருந்து ‘பாதுகாப்பு’’ கருதி அந்நிய மண்ணில் போட்டியிடுவது வழக்கம்.

முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது- நிறைய வேட்பாளர்கள் வேற்று ஊர்களில் களம் காண்கிறார்கள்.

அவர்களில் சிலரை பார்க்கலாம்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் பூர்வீகம் அந்த தொகுதிக்கு  உள்பட்ட கிராமம் என்றாலும் அவர் சென்னையில் ;செட்டில்’ ஆனவர். அந்த தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்டு- 2 ஆம் இடம் பிடித்தவர். கன்னியாகுமரி தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டசபை தொகுதிகளும் இப்போது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வசம் இருப்பதால் வெற்றி உறுதி என்பது வசந்தகுமாரின் கணக்கு..

நினைவு தெரிந்த நாளில் இருந்து சென்னையை இருப்பிடமாக கொண்டவர்கள் தி.மு.க.வின் கனிமொழியும், பா.ஜ.க.வின் தமிழிசை சவுந்தரராஜனும்.இருவருமே தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு பெரும்பான்மையாக இருக்கும் நாடார் சமூக வாக்குகளை குறி வைத்து- வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ராமநாதபுரத்தில் தி.மு.க.கூட்டணியில் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடும் நவாஸ்கனி எஸ்.டி.கூரியர் ஓனர். சென்னை வாசி. அ.தி.மு.க.கூட்டணியில் ,பா.ஜ.க.வேட்பாளராக களம் காணும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலிக்காரர். அங்கு திரளாக உள்ள இஸ்லாமிய வாக்குகளை நம்பி அலியும், பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளை மனதில் வைத்து நயினாரும் கோதாவில் குதித்துள்ளனர்.

ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை –தேனியில் நிறுத்தி உள்ளது காங்கிரஸ். அவர் கேட்டது-ஈரோடு. அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால்- இளங்கோவனை தேனிக்கு அனுப்பி விட்டார்கள்.

திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு புதுக்கோட்டை பூர்வீகம் என்றாலும்-அவரது வாசம் பெரும்பாலும் –திருச்சி தான்.அவரை  அந்நிய வேட்பாளர் கணக்கில் சேர்க்க முடியாது.

குற்றாலம் பக்கமுள்ள இசக்கி சுப்பையாவை தென் சென்னையில் நிறுத்தி இருக்கிறார்- டி.டி.வி.தினகரன். இது என்ன கணக்கு என்று தெரியவில்லை.

அதே போல் சேலம் மோகன்ராஜை – வட சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்- தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த்.

பெரம்பலூர் ஆ.ராசா (தி.மு.க.) நீலகிரிக்கு அனுப்ப பட்டுள்ளார்.

சென்னையில் வசிக்கும் ஜெகத்ரட்சகன்( தி.மு.க.) ,ஏ.கே.மூர்த்தி( பா.ம.க.) ஆகியோர் அரக்கோணத்தில் நிற்கிறார்கள்.

அதுபோல் சென்னையில் இருக்கும் அன்புமணி (பா.ம.க) தர்மபுரிக்கு போய் உள்ளார்.

–பாப்பாங்குளம் பாரதி