நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு..
டகவியலாளர்களுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணம்.. தனியார் டிவி சேனல் ஊழியர்களுக்கு எப்படி கொரோனா பலி நிதியாக 10 லட்ச ரூபாய் கொடுக்கலாம் என்று பல்வேறு தரப்பினர் ஆதங்கப்படுகின்றனர் இவர்களின் ஆதங்கம் நியாயமானது தான்.
நாம் ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறோம். கொரோனா முன் களப்பணி என்றால் அது அது மருத்துவத் துறை ஊழியர்கள் மட்டும்தான்.
இதுபோல தொற்று காலத்தில் முன் களப்பணி என்று பட்டியலிட ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது.
வருமானமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தமிழக அரசு இன்னொரு பக்கம் நிவாரண நிதி என்று தாறுமாறாக எடுத்து இதைக் ஆரம்பித்தால் அது ஏற்புடையதாக இருக்காது.
பத்திரப்பதிவு, டாஸ்மார்க், வணிகவரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என அரசுக்கு அள்ளித்தரும் வருவாய் ஆதாரங்கள் அத்தனையும் மூடப்பட்டு கிடக்கின்றன.
ஊடகவியலாளர்களுக்கு நிவாரண நிதியை அரசு அறிவித்திருக்கும் நிலையில் சில கசப்பான உண்மைகளை இங்கே கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும்.
நமது நிலைப்பாடு இரண்டு வகை. ஒன்று இனி அந்தந்த சேனல்களே நிவாரண நிதியை வழங்கட்டும்.
இரண்டாவது தற்போது அறிவித்தவர்களுக்கு அரசு கொடுத்து விட்டுப் போகட்டும் இனி தேவையில்லை.
எதற்காக கொடுப்பதைத் தடுக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை தெளிவாக சொல்ல இங்கே கடமைப்பட்டுள்ளோம்..
பலரும் நினைப்பதுபோல் செய்தி சேனல்கள் தங்கள் ஊழியருக்கு நெருக்கடி என்றால் ஒரு ஆணியும் புடுங்காதுது. முடிந்தால் வேலையை விட்டு துரத்தி விடும்.
ஒரு நெருக்கடியில் சிக்கி மருத்துவமனையில் விழுந்தால் எவனும் எட்டி கூட பார்க்க மாட்டார்கள்.
ஊர் உலகத்துக்கெல்லாம் உதவுவதுபோல் சீன் போடும் சேனல் முதலாளிகள் அவர்களின் ஊழியர்களுக்கு உதவ மாட்டார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை. ஒன்றிரண்டு பேருக்கு அவர்கள் செய்கிறார்கள் என்றால் அவன் பயங்கரமான ஜால்ரா பார்ட்டியாக இருப்பான்.
அவ்வளவு ஏன் நம்முடைய அனுபவத்தை சொல்லுகிறோம்.. 2008 எட்டாம் ஆண்டு. 20 இருபதாவது நாளில் என் தங்கை மகனுக்கு மிகப் பெரிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும். பல லட்சம் செலவாகும். வெறும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவுங்கள் என்று சன் பவுண்டேஷன் இடம் நடையாய் நடந்தோம். பச்சையாக சொன்னால், என்னுடைய மலத்தை நானே தின்னாத குறை. கடைசிவரை தம்படி பைசா கொடுத்து உதவவில்லை.
சன்டிவி எடிட்டோரியல் ரசூல்கான் என்ற மிகச்சிறந்த சப் எடிட்டர் இருந்தார். டெல்லி அரசியலும் மத்திய ஆட்சி நிர்வாமுகம் அவருக்கு அவ்வளவு அத்துபடி கலாநிதிமாறன், சாக்ஸ், டெக்னிக்கல் கண்ணன், ஆர்எம்ஆர் பைனான்ஸ் நடராஜன்  போன்றோர் எங்கள் எட்டுமணி செய்திப் பிரிவுக்கு அவ்வளவு நெருக்கமானவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில் ரசூல் கான் அகால மரணம் அடைகிறார் அவருக்கு நிர்வாகம் பத்து பைசா உதவவில்லை. வெளியே சொன்னால் வெட்க கேடு. கடைசியில் நாங்களாக வசூல் செய்து எங்களால் முடிந்த அளவுக்கு அந்த குடும்பத்திடம் பணமுடிப்பு கொடுத்தோம்.
நெல்லையில் அடக்கம் செய்யப்பட்ட ரசூல் கான் உடலுக்கு மலர்வளையம் 6 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நெல்லை சென்ற ஒரே ஆள் நான்தான்.
கலைஞர் டிவி பிறந்தபோது சன் டிவியில் பெரும்பாலோனோருக்கு மூன்று மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. சன்டிவி எடிட்டோரியலில் மட்டும் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
மற்றவர்களுக்கு ஐம்பதாயிரம் சம்பளம் என்றால் எங்களுக்கு வெறும் 15,000. அப்படியே சாக அடித்தார்கள்.
இதைவிட கொடுமை ஒன்றுமே தெரியாத ஜூனியர் எல்லாம் எங்கள் கண்ணெதிரிலேயே வேலைக்கு எடுத்து எடுத்து எங்களை விட மூன்று மடங்கு சம்பளம் ஃபிக்ஸ் செய்து அவர்களுக்கு நாங்கள் வேலை கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டனர்.
ஒரு தடவை முரசொலி மாறனுக்கு அப்போலோவில் ரத்தத்தை கொடுத்துவிட்டு வந்த நமக்கு ஒரு ஷிப்ட் லீவு கொடுக்கவில்லை நிர்வாகம். மாறாக இரண்டு ஷிப்ட் தொடர்ந்து வேலை வாங்கி அதற்கு பிறகே வீட்டுக்கு அனுப்பியது.
காமெடி என்றால், சில காமெடி நாய்கள் இங்கே வரும். இவருக்கு சன்டிவி பாசம் பொத்துக்கொண்டு ஊற்றுகிறது என்று கெக்கே பிக்கே என்று நம்மை பார்த்து சிரிக்கும். அந்த நாய்களுக்கு நாம் யாரென்றும் தெரியாது. சன் டிவியில் நமக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது.
சன் டிவி என்பது மிகப்பெரிய பிரம்மாண்ட நெட்வொர்க் அதில் மேல்மட்ட நிர்வாகிகள் நன்கு தெரிந்திருந்தாலும் நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும். அதைத்தான் செய்து விட்டு வெளியே வந்தோம்.
காலை 8 மணிக்கும் இரவு 8 மணிக்கும் எங்கள் உயிரைக் கொடுத்து சன் டிவி செய்தியை வெற்றிகரமாக ஓட விட்டோம். டிவியில் செய்தி ஓடும் போது அவ்வளவு பெருமை கொள்ளும் மனது.
அதே டிவி எங்களை வஞ்சித்தது போது 8 மணி செய்தி நாசமாய் போகும் எந்த ஜாம்பவான் வந்து நின்றாலும் எங்களை மாதிரி இனி உருவாக்கவே முடியாது. அழிந்து தொலையட்டும் என்று சாபனை விட்டு விட்டு வெளியேறினோம்.
சன்டிவி மட்டுமல்ல அந்த காலத்தில் எங்களோடு மற்ற சேனல்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மற்ற நண்பர்களும் அவரவர் சேனல்களில் அவரவர் தகுதிக்கேற்ற கொடுமைகளை சந்தித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
கடைசியாக நான் வேலை பார்த்த சேனலில் பைபாஸ் சர்ஜரி என்று போய் ஆஸ்பத்திரியில் படுத்தேன். அந்த மாசம் சம்பளம் கொடுத்தார்கள். அதோடு கழட்டி விட்டு போய்க்கொண்டே இருந்துவிட்டார்கள் ..
இப்போதுகூட சேனல்களில் வேலை செய்பவர்களைப் பார்த்து பரிதாபப்பட தான் தோன்றுகிறதே தவிர நான் என்றைக்குமே சந்தோஷப்பட்டது இல்லை.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தப்படும் அபாயகரமான நிலையில் தான் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட பரிதாபத்துக்குரிய ஊடக தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற தொகையையும் ஏன் தடுக்க வேண்டும் என்று மனது உண்மையிலேயே அலைபாய்கிறது.
இப்போதுகூட உயிரிழந்த செய்தியாளன் பற்றி வருத்தப்படுவதை விட அந்த இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று இந்நேரம் 20 பேராவது முட்டிமோதி கொண்டிருப்பார்கள்.
விட்டில் பூச்சிகள் …